அரசின் மின் கட்டண உயர்வால் ஏழைகளுக்கு கூடுதல் சுமை
அரசின் அறிவிப்பால் முன்பை விட மின் கட்டணம்25 முதல் 50 சதவீதம் அதிகரிக்கும். இதனால் கூடுதல் சுமை ஏற்படும் என்று பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.
அரசின் அறிவிப்பால் முன்பை விட மின் கட்டணம்25 முதல் 50 சதவீதம் அதிகரிக்கும். இதனால் கூடுதல் சுமை ஏற்படும் என்று பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.
தனியார்மயத்துக்கு எதிர்ப்பு
நாடு முழுவதும் இணை ஒழுங்கு முறை மின்சார ஆணைய அனுமதியின்பேரில் மின் கட்டண விகிதம் மாற்றியமைக்கப்படுகிறது. அதாவது வரவு, செலவு விவரங்களையும், பற்றாக்குறையை சமாளிக்க கட்டண உயர்வு அவசியம் என்பதையும் மின்துறை பரிந்துரைக்கும்.
அதன்பேரில் ஒழுங்குமுறை ஆணையம் பொதுமக்களிடம் கருத்து கேட்டு கட்டண மாற்றம் குறித்து அனுமதி அளிக்கும். அதன்பிறகு கட்டணம் மாற்றியமைக்கப்படும்.
மாநிலங்களை பொறுத்தவரை பற்றாக்குறையை அரசு ஏற்றுக்கொண்டு துறைக்கு நிதி வழங்கும். அதாவது உயர்த்தப்படும் கட்டணங்களை சில நேரங்களில் அரசே ஏற்றுக்கொள்ளும்.
இதனால் மாநிலங்களை பொறுத்தவரை கட்டண உயர்வு என்பது பெருமளவில் இருக்காது. தவிர்க்க முடியாத நேரங்களில் சிறிதளவு கட்டண உயர்வு இருக்கும். சில மாநிலங்களில் மின் வினியோகமானது தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் புதுவையில் மின்வினியோகத்தை தனியார் மயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு ஊழியர்களும், அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
25 முதல் 50 சதவீதம் உயரும்
புதுச்சேரி மாநிலத்தை பொறுத்தவரை மின்சார கட்டணத்தை கோவாவில் உள்ள இணை ஒழுங்குமுறை மின்சார ஆணையம் கட்டணத்தை நிர்ணயிக்கிறது. கட்டண உயர்வு வேண்டும் என்றால் இந்த ஆணையத்துக்கு மின்துறை பரிந்துரைக்கும். அதன்பேரில் பொதுமக்களிடம் கருத்துகேட்டு அதன்பிறகே மின்கட்டணம் குறித்து ஆணையம் சார்பில் முடிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கடந்த காலங்களில் யூனிட்டுக்கு 5 காசு, 10 காசு என்று கட்டண உயர்வு இருந்து வந்தது. ஆனால் இந்த ஆண்டு வீட்டு உபயோகத்துக்கான மின் கட்டணமானது மிகக்கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதாவது 100 யூனிட் வரையில் யூனிட் ஒன்றுக்கு ரூ.1.55 ஆக இருந்த கட்டணம் ரூ.1.90 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 101 முதல் 200 யூனிட் வரை யூனிட்டுக்கு ரூ.2.60 ஆக இருந்த கட்டணம் ரூ.2.90 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 201 முதல் 300 யூனிட் வரை யூனிட்டுக்கு ரூ.4.65 ஆக இருந்த கட்டணம் ரூ.5 ஆக உயர்ந்துள்ளது. 300 யூனிட்டுக்கு மேல் யூனிட் ஒன்றுக்கு ரூ.6.05-ல் இருந்து ரூ.6.45 ஆக உயர்ந்துள்ளது. அதாவது 35 முதல் 40 காசுகள் வரை உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி நிலைக்கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் ஒரே அளவிலான உபயோகத்துக்கு முன்பைவிட 25 முதல் 50 சதவீதம் வரை மின் கட்டணம் அதிகரிக்கும். இந்த அதிரடி கட்டண உயர்வு பொதுமக்களுடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
கடும் எதிர்ப்பு
இந்த மின் கட்டண உயர்வுக்கு புதுவை அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் தங்களது கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பொருளாதார நிபுணரும், கிழக்கு மாநில அ.தி.மு.க. அவைத்தலைவருமான ராமதாஸ் கூறியதாவது:-
மின் வினியோகத்தை திறமையாக செய்திருந்தால் இந்த கட்டண உயர்வை அரசு தவிர்த்திருக்கலாம். கட்டணத்தை உயர்த்தாவிட்டால் நஷ்டம் ஏற்படுவதாக மின்துறை சொல்கிறது.
சமீபத்தில் மதுபானங்களுக்கான வரி உயர்த்தப்பட்டது. அதேபோல் மதுபானங்களுக்கு வரியை உயர்த்தி இதை தவிர்த்திருக்கலாம்.
பொருளாதார அடிப்படையில் இந்த கட்டண உயர்வு அனைத்து தரப்பு மக்களையும் கடுமையாக பாதிக்கும். ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து செலுத்தாமல் அரசு துறைகளும் மின் கட்டண பாக்கி வைத்துள்ளன. அரசியல் துணையோடு பலர் மின் கட்டண பாக்கி வைத்துள்ளனர்.
ஏழைகளுக்கு அதிக சுமை
கட்டணத்தை செலுத்தாமல் நீதிமன்றம் சென்றவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கட்ட செய்திருக்கலாம். மின் கட்டணத்தை செலுத்தாமல் பலர் தொழிற்சாலைகளை மூடிவிட்டு சென்றுள்ளனர். அதுகுறித்து நடவடிக்கை எடுத்திருக்கலாம்.
இந்த குறைகளையெல்லாம் சரி செய்ய தவறிய அரசு மின் கட்டணத்தை உயர்த்தி ஏழை மக்களின் சுமையை அதிகப்படுத்தி உள்ளது.
மின் இழப்பு என்ற பெயரில் மின் திருட்டு நடக்கிறது. அதை செய்பவர்கள் யார் என்பது அரசுக்கு தெரியும். அதை சரிசெய்தாலே பாதி பிரச்சினைக்கு தீர்வு காணலாம். துறை அமைச்சரும், எம்.எல்.ஏ.க்களும் ஒன்றாக அமர்ந்து ஆலோசித்தாலே இதற்கு வழிகண்டிருக்கலாம். இதற்கெல்லாம் அவர்களுக்கு நேரம் இல்லை.
தனியார்மயமானால்...
இந்த சூழலில் மின்துறை தனியார்மயமானால் அரசுக்கு வழங்குவது போல் மத்திய தொகுப்பு மற்றும் அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து குறைந்த விலைக்கு மின்சாரம் கிடைக்காது.
அப்படியானால் தனியாரிடம் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்க வேண்டி இருக்கும். அதை ஈடுகட்ட லாப நோக்கத்துடன் முறையில்லாத அளவுக்கு கட்டணத்தை உயர்த்துவார்கள். இதையும் அரசு கவனித்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு ராமதாஸ் கூறினார்.
பொதுமக்கள் தெரிவித்த கருத்து வருமாறு:-
மூலக்குளம் பிரவீனா கந்தன் (மூலக்குளம்):-
ஜி.எஸ்.டி. அமல்படுத்துவதற்கு முன்பு பல்வேறு சலுகைகள் கிடைத்தது. ஒரே நாடு ஒரே வரி என்ற திட்டத்தால் புதுவைக்கு கிடைத்த பல்வேறு சலுகைகள் பறிபோனது. ஏற்கனவே பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துவிட்டன. இதனை சமாளிக்க முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். இதற்கிடையே தமின்கட்டணத்தை உயர்த்தி இருப்பது மக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தி உள்ளது. தற்போது கோடை காலம் தொடங்கிவிட்டதால் மின் தேவையின் பயன்பாடு அதிகம் இருக்கும். இந்த வேளையில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
குடும்ப தலைவி லதா ராஜசேகர் (தட்டாஞ்சாவடி) :-
கொரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பலர் வேலையிழந்தனர். 2 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகிறார்கள். பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் நிலை உள்ளது. தற்போது மின் கட்டணத்தை உயர்த்தி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. மேலும் மின்துறை தனியார்மயமாக்கப்பட்டால் மின் கட்டண உயர்வை யாராலும் கட்டுப்படுத்த முடியாது.
தமிழரசன் (பிச்சவீரன்பேட்:-
அத்தியாவசிய பொருட்களின் விலை உயரவால் வருமானத்தை விட செலவு அதிகமாக உள்ளது. இந்தநிலையில் மின் கட்டண உயர்வு பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. இதை அரசு திரும்ப பெற வேண்டும்.
மின்நுகர்வோர் நல அமைப்பு வை.பாலா:-
வழக்கத்தைவிட கோடை காலத்தில் மின் தேவை அதிகம். பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் இறுதியாண்டு, பருவத்தேர்வு நடைபெற உள்ளது. கொரோனா காரணமாக வணிகர்கள், விவசாயிகள், தொழிற்சாலைகள், தினக்கூலிகள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கல்வி கட்டணங்களை செலுத்த முடியாமல் மக்கள் சிரமப்படுகிறார்கள். இந்தவேளையில் மின் கட்டண உயர்வு மக்களுக்கு கூடுதல் சுமையாகயாக இருக்கும். எனவே உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை கவர்னர், முதல்-அமைச்சர் நிறுத்தி வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story