பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பஸ் கட்டணம் உயருமா? போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பதில்
ஹலோ எப்.எம்.மில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு ஒலிபரப்பாகும் ‘ஸ்பாட்லைட்’ நிகழ்ச்சியில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கலந்துகொண்டு பேசுகிறார்.
போக்குவரத்து துறை அமைச்சர் கூறுகையில், அரசுக்கு வருவாய் ஈட்டி தரக்கூடிய ஒரு துறையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தன்னை நம்பி ஒப்படைத்துள்ளதாகவும், பெண்களுக்கு கட்டணமில்லா பஸ் வசதி மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு போன்ற செலவினங்கள் அதிகரிப்பு இருந்து வரும் நிலையில், பஸ் கட்டண உயர்வு குறித்து முதல்-அமைச்சர் முடிவு செய்வார் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், முதல்-அமைச்சரின் துபாய் பயண சர்ச்சைகள் குறித்து பேசுகையில், நீண்ட நாட்களாக உழைத்து கொண்டே இருக்கும் முதல்வர், வெளிநாடு செல்லும்போது தனது குடும்பத்தினருடன் செல்வதில் தவறு இல்லை என்றும், இதற்கான விமான செலவை தி.மு.க. ஏற்றுக்கொண்டு உள்ளதாகவும், இதை பிரச்சினையாக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
அதேபோல் டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்களுடனான சந்திப்பு தமிழக நலன் சார்ந்ததே தவிர, இதில் விமர்சிக்க எதுவும் இல்லை என்றும், மத்திய பா.ஜ.க. அரசின் தவறுகளை தொடர்ந்து முதல்-அமைச்சர் ஸ்டாலின் கண்டிக்க தவறவில்லை என்றும் கூறியுள்ளார்.
மேலும் விருதுநகர் பாலியல் சம்பவம், தி.மு.க.வினரால் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் சட்ட-ஒழுங்கு சீர்குலைவு சம்பவங்கள், வன்னியர் இடஒதுக்கீடு பிரச்சினையை அரசு சரியாக கையாளவில்லையா? உள்ளிட்ட சமகால அரசியல் நிகழ்வுகள் குறித்து நிகழ்ச்சி தொகுப்பாளர் ராஜசேகரின் கேள்விகளுக்கு விளக்கமாக அவர் பதில் அளித்துள்ளார்.
Related Tags :
Next Story