சிதம்பரம் கல்லூரி மாணவி தற்கொலை விவகாரத்தில் திருப்பம்: வீடியோவை வெளியிடுவதாக மிரட்டிய காதலன் கைது
சிதம்பரத்தில் மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டு வெளிநாட்டு மாப்பிள்ளையை திருமணம் செய்ய சம்மதித்ததால், தன்னுடன் நெருங்கி பழகிய வீடியோவை வெளியிடுவேன் என்று மிரட்டிய காதலன் கைது செய்யப்பட்டார்.
கல்லூரி மாணவி தற்கொலை
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள தெற்கு பிச்சாவரம் நடுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகள் அஜினாதேவி (வயது 21). இவர் சிதம்பரம் அருகே வாண்டியாம்பள்ளம் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி சி.முட்லூரில் உள்ள சிதம்பரம் அரசு கலைக்கல்லூரியில் எம்.எஸ்சி. கணிதம் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு சென்றிருந்தார். அங்கு கடந்த 30-ந்தேதி அதிகாலை வீட்டின் மாட்டுக்கொட்டகையில், அஜினாதேவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குளியல் வீடியோ
இதுகுறித்து அவருடைய தாய் விமலா கொடுத்த புகாரின்பேரில் அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது இறந்து போன மாணவி எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது.
அதில், தான் குளிக்கும்போது ஒருவர் வீடியோ எடுத்து தன்னை மிரட்டி வருவதாகவும், அதனால் வேறு வழி இல்லாமல் தற்கொலை செய்து கொள்வதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து தனிப்படை அமைத்து மாணவியின் தற்கொலைக்கு காரணமானவர்களை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
மாமா மீது சந்தேகம்
இதில், மாணவி அஜினாதேவியின் செல்போனை போலீசார் ஆராய்ந்தபோது அதில் 3 செல்போன் எண்கள் தொடர்பு கொள்ள முடியாத வகையில் (பிளாக்) செய்யப்பட்டிருந்தது. அந்த எண்களை கைப்பற்றி விசாரித்தனர்.
அதில், அஜினா தேவியின் மாமா முறை உறவுக்காரரான கடலூர் மாவட்டம் நைனார்குப்பம் கிராமத்தை சேர்ந்த ராஜலிங்கம் மகன் லோகநாதன் (21) என்பவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில், அஜினாதேவி தற்கொலைக்கு அவர்தான் காரணம் என தெரியவந்தது.
2 ஆண்டுகளாக காதல்
மேற்கொண்டு லோகநாதனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் வெளியான தகவல்கள் வருமாறு:-
அஜினாதேவியும் லோகநாதனும் ஆண்டார் முள்ளிப்பள்ளம் பள்ளியில் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 ஒன்றாக படித்துள்ளனர். தற்போது, லோகநாதன் கடலூரில் உள்ள பெரியார் அரசு கலை கல்லூரியில் எம்.எஸ்சி. கணிதம் முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக அஜினாதேவியும், அவரும் காதலித்து வந்துள்ளனர்.
இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு அஜினாதேவிக்கு அவரது குடும்பத்தினர் வெளிநாட்டில் வேலை செய்யும் மாப்பிள்ளை ஒருவரை பார்த்து திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். அப்போது, அஜினாதேவிக்கு ஜாதகத்தில் தோஷம் இருந்த காரணத்தினால் 2 ஆண்டுகள் கழித்து திருமணம் செய்ய அவரது வீட்டில் முடிவு செய்தனர்.
நெருங்கி பழகிய வீடியோ
இதனால், அஜினாதேவி அந்த வெளிநாட்டு மாப்பிள்ளையிடம் செல்போனில் பேசி வந்துள்ளார். இதுபற்றி அறிந்த லோகநாதன் அஜினாதேவியிடம் ஏன் அவனிடம் பேசுகிறாய் என்று கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அதில் ஆத்திரம் அடைந்த லோகநாதன் நீ அவனிடம் பேசிக் கொண்டிருந்தால் நீயும் நானும் நெருங்கி பழகியபோது எடுத்த வீடியோ மற்றும் புகைப்படங்களை அவனுக்கு அனுப்பி விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
இதனால் மனமுடைந்த அஜினாதேவி பயந்து போய் என்ன செய்வது என்று அறியாமல் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது.
சிறையில் அடைப்பு
இதையடுத்து லோகநாதனை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story