மலைப்பாதையில் கோவிலுக்கு சென்றபோது கோர விபத்து: மினிவேன் கவிழ்ந்து 11 பெண்கள் பலி - 20 பேர் படுகாயம்


மலைப்பாதையில் கோவிலுக்கு சென்றபோது கோர விபத்து: மினிவேன் கவிழ்ந்து 11 பெண்கள் பலி - 20 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 3 April 2022 6:19 AM IST (Updated: 3 April 2022 6:19 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் அருகே மலைப்பாதையில் சென்ற மினி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே ஊரை சேர்ந்த 11 பெண்கள் பரிதாபமாக பலியானார்கள்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலையில் பல்வேறு மலை கிராமங்கள் உள்ளன. இங்கு பஸ் போக்குவரத்து அதிகம் இல்லாததால் வேன் உள்ளிட்ட வாகனங்களையே மலைவாழ் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

ஜவ்வாதுமலை நெல்லிவாசல்நாடு பகுதியில் சேம்பரை என்ற கிராமத்தில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருவிழா நடக்கிறது. நேற்று சனிக்கிழமை என்பதால் ஆஞ்சநேயர் கோவிலில் கூட்டம் அலைமோதியது.

புலியூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய முடிவு செய்தனர். ஆண்கள் இருசக்கர வாகனங்களிலும், பெண்கள் மினிவேனிலும் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி மினிவேன் வரவழைக்கப்பட்டு அதில் 30 பெண்கள் ஏறிக்கொண்டனர். வேன் காலை 10.30 மணியளவில் சேம்பரை கிராமத்துக்கு புறப்பட்டது. மினிவேனை சேம்பரை கிராமத்தை சேர்ந்த பரந்தாமன் ஓட்டிச்சென்றார்.

சரக்கு ஏற்றும் வேனில் ஆட்கள் செல்ல தடை உள்ளது. எனினும் வேறு வழியின்றி 30 பெண்களும் ஆடுகளை அடைக்கப்படுவதுபோல் நின்றவாறு மினிவேனில் சென்றனர்.

ஆண்கள் அனைவரும் மோட்டார்சைக்கிள், ஸ்கூட்டரில் இருவர், 3 பேர் என வேனுக்கு பின்னாலும், முன்னாலும் அணிவகுத்து சென்று கொண்டிருந்தனர்.

அளவுக்கு அதிகமான ஆட்கள் ஏறும்போது சாதாரண சாலையில் மினிவேன் செல்லவே சிரமம் ஏற்படும்.

இந்த நிலையில் கரடுமுரடான மலைப்பாதையில் அதிக பாரத்துடன் மினிவேன் தள்ளாடியபடி சென்றது. சேம்பரை கிராமத்தை நெருங்கியபோது மேடான இடத்தில் மிகவும் மோசமான சாலையில் வேன் சென்றது. அளவுக்கு அதிகமான பெண்கள் ஏற்றப்பட்டதால் வேன், மலைப்பாதையில் ஏற முடியவில்லை. டிரைவர் கடுமையான முயற்சி எடுத்தும் முடியாமல் திடீரென வேன் பின்னோக்கி வர ஆரம்பித்தது.

அப்போது மின்கம்பத்தில் மோதிய மினிவேன் 50 அடி பள்ளத்தில் குட்டிக்கரணம் அடித்தபடி உருண்டு கவிழ்ந்தது. இதில், வேனில் இருந்த பெண்கள் ஒருவர் மீது ஒருவர் மோதியபடி இடிபாடுகளில் சிக்கி காப்பாற்றும்படி அபயகுரல் எழுப்பினர்.

மோட்டார்சைக்கிளில் சென்ற ஆண்கள் தங்கள் கண் எதிரிலேயே வேன் உருண்டு கவிழ்ந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து அங்கு சென்றனர். செல்போன் கோபுரமும் அங்கு இல்லாததால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க முடியாமல் மீட்பு பணியில் அவர்களாகவே ஈடுபட்டனர்.

இதில் வேனின் இடிபாடுகளில் சிக்கி புலியூரை சேர்ந்த சுகந்திரா(வயது 55), துர்கா(40), பவித்ரா(18), பரிமளா(12), செல்வி(35), மங்கை(60), அலமேலு(12), சென்னம்மாள்(12), திக்கியம்மாள்(30), ஜெயபிரியா(16), சின்னதிக்கி(22) ஆகிய 11 பெண்கள் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். இதில் துர்கா, பவித்ரா, பரிமளா ஆகியோர் தாய், மகள்கள் ஆவர். இந்த விபத்தில் மினிவேன் டிரைவர் பரந்தாமன் உள்பட 20 பேர் காயம் அடைந்தனர். அவர்களை மோட்டார்சைக்கிளில் வந்தவர்கள் ஏற்றிக்கொண்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரி நோக்கி புறப்பட்டனர். அதற்குள் தகவல் அறிந்த திருப்பத்தூர் தாலுகா போலீசார் அங்கு விரைந்தனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து 7 ஆம்புலன்ஸ்கள் அங்கு வரவழைக்கப்பட்டு படுகாயத்துடன் இருந்தவர்கள் ஏற்றப்பட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த துயர விபத்து குறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மினிவேன் மலையில் உருண்டு ஒரே ஊரை சேர்ந்த 11 பெண்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story