சொத்து வரி உயர்வை கண்டித்து 5-ம் தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
சொத்து வரி உயர்வை கண்டித்து 5-ம் தேதி (செவ்வாய்கிழமை) அ.தி.மு.க. சார்பில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
சொத்து வரி உயர்வை கண்டித்து 5-ம் தேதி (செவ்வாய்கிழமை) அ.தி.மு.க. சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில், சென்னையில் ஓ.பன்னீர்செல்வமும், திருச்சியில் எடப்பாடி பழனிசாமியும் பங்கேற்கிறார்கள்.
இது தொடர்பாக, அ.தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், மக்களை ஏமாற்றும் வகையில், சொத்து வரி 150 சதவீதம் உயர்வு, அ.தி.மு.க. அரசு கொண்டுவந்த மக்கள் நலத் திட்டங்கள் நிறுத்தம் என்று கடந்த 11 மாத காலமாக தி.மு.க. அரசு மேற்கொண்டிருக்கும் மக்கள் விரோத நடவடிக்கைகளையும், அராஜக ஆட்சி முறையையும் எதிர்த்து, சொத்து வரி உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி அ.தி.மு.க. 5-4-2022 அன்று (நாளை) கண்டன ஆர்ப்பாட்டங்களை மாவட்ட தலைநகரங்களில் நடத்த இருக்கிறது.
மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு, அ.தி.மு.க. சார்பில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டங்களில், கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைந்த சென்னை மாவட்டத்தில் தலைமை ஏற்று நடத்த இருக்கிறார்.
மேலும், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தை தலைமை ஏற்று நடத்த இருக்கிறார்.
அதேபோல், ஏனைய மாவட்டங்களில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டங்களில், சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தலைமை கழக நிர்வாகிகளும், முன்னாள் அமைச்சர்களும், கட்சியின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகளும் பங்கேற்று சிறப்பிப்பார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story