அனைத்து பதவிகளுக்கும் ஆம் ஆத்மி போட்டியிடும்
புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலில் அனைத்து பதவிகளுக்கும் ஆம் ஆத்மி போட்டியிடும் என்று மாநில செயலாளர் ஆலடி கணேசன் கூறினார்.
புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலில் அனைத்து பதவிகளுக்கும் ஆம் ஆத்மி போட்டியிடும் என்று மாநில செயலாளர் ஆலடி கணேசன் கூறினார்.
முப்பெரும் விழா
புதுச்சேரி ஆம் ஆத்மி கட்சி சார்பில் புதுவை மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு பெறுதல், உறுப்பினர் சேர்க்கை, அரசியல் கருத்தியல் கலந்தாய்வு ஆகிய முப்பெரும் விழா லெனின் வீதியில் உள்ள தனியார் திருமண நிலையத்தில் இன்று நடந்தது. கட்சியின் மாநில செயலாளர் ஆலடி கணேசன் கலந்துகொண்டு முப்பெரும் விழாவை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது பா.ஜ.க.- என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகள் அளித்த வாக்குறுதிகளை கேட்டு மக்கள் நம்பி அந்த கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்தனர். ஆனால் ஆட்சி அமைத்த பின்னர் மாநில வளர்ச்சிக்கு அந்த கட்சிகள் எதுவும் செய்யவில்லை. புதுவைக்கான கடனை தள்ளுபடி செய்யவில்லை. நிதிக்குழுவில் புதுவையை சேர்க்கவில்லை. பஞ்சாலைகள் திறக்கப்படவில்லை. இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு கேள்விக்குறியாக உள்ளது. மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
எனவே ஆம் ஆத்மி கட்சியின் தேசிய தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் வழிகாட்டுதலின் படி புதுவை மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளோம். அதற்கான விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. உறுப்பினர் சேர்க்கையும் நடைபெற்று வருகிறது. நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் அனைத்து பதவிகளுக்கும் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும். புதுச்சேரியில் நல்லாட்சி அமைய ஆம் ஆத்மி பாடுபடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அரசியல் நிலவரம்
நிகழ்ச்சியில் மாநில ஒருங்கிணைப்பாளர் ரவி சீனிவாசன், சுத்தம் சுந்தர்ராஜன், சண்முக சுந்தரம், தாமு, பிரபாகரன், பூபேஷ் ராஜன், விழுப்புரம் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் விநாயகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் பல்வேறு கட்சியில் இருந்து விலகியவர்கள் ஆம் ஆத்மியில் சேர்ந்தனர். தொடர்ந்து நடந்த கருத்தியல் கலந்தாய்வில் ஆம் ஆத்மி கட்சியின் சாதனைகள், புதுச்சேரியின் அரசியல் நிலவரம் குறித்து பேசப்பட்டது.
Related Tags :
Next Story