காரைக்கால் பஜன்கோவா அரசு வேளாண் கல்லூரிக்கு நட்சத்திர அங்கீகாரம்


காரைக்கால் பஜன்கோவா அரசு  வேளாண் கல்லூரிக்கு நட்சத்திர அங்கீகாரம்
x
தினத்தந்தி 3 April 2022 10:19 PM IST (Updated: 3 April 2022 10:19 PM IST)
t-max-icont-min-icon

காரைக்கால் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்துக்கு (பஜன்கோவா) நட்சத்திர அந்தஸ்து கிடைத்துள்ளது.

காரைக்கால் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்துக்கு (பஜன்கோவா) நட்சத்திர அந்தஸ்து கிடைத்துள்ளது.
இதுதொடர்பாக காரைக்கால் பஜன்கோவா அரசு வேளாண் கல்லூரி முதல்வர் புஷ்பராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கல்லூரிக்கு பெருமை
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் இணைக்கப்பட்டுள்ள காரைக்கால் பஜன்கோவா அரசு வேளாண் கல்லூரி, கடந்த 35 ஆண்டுகளாக வேளாண் கல்வி, ஆராய்ச்சி, விரிவாக்கப் பணிகளை செய்துவருகிறது. இந்த கல்லூரி பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி) சட்ட விதிகளுக்குட்பட்டு கடந்த 2014- ம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்டதோடு, 2019-ம் ஆண்டில் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின், தேசிய கல்வி மற்றும் அங்கீகார வாரியத்தால் உயரிய மதிப்பெண் (2.97) அளிக்கப்பட்டு தேசிய அங்கீகாரம் பெற்றுள்ளது. 
இந்த கல்லூரிக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயர் தொழில்நுட்பத் துறையின் நட்சத்திர அங்கீகாரம் தற்போது கிடைத்துள்ளது. இளங்கலை வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிலும் மாணவர்களின் திறன் மேம்பாட்டை கருத்தில்கொண்டு ஆய்வுக்கூடங்களின் தரத்தை மேம்படுத்தவும், மாணவர்களை தேசிய அளவிலான ஆய்வகங்கள் மற்றும் தொழில்கூடங்களுக்கு அழைத்துச் செல்லும் வகையிலும், 3 ஆண்டுகளில் இந்த திட்டத்தை செயல்படுத்த ரூ.63 லட்சம் கல்லூரிக்கு வழங்கப்பட்டுள்ளது.
நட்சத்திர அங்கீகாரம்
இதன் மூலம் கல்லூரி ஆசிரியர்கள் புதிய தொழில்நுட்பம் சார்ந்த பயிலரங்குகள் மற்றும் பயிற்சிகளில் பங்கேற்று தொழில்நுட்ப வளர்ச்சிகளை அறிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கல்லூரியின் உழவியல் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் பூச்சியியல் துறை, பயிர் நோயியல் துறை, வேளாண் நுண்ணுயிரியல் துறை ஆகியவற்றின் ஆய்வுக்கூட கட்டமைப்புகளை மேம்படுத்த முடியும்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் முதல் நட்சத்திர அந்தஸ்து பெற்ற கல்லூரி என்ற பெருமை கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story