புதுக்கோட்டையில் தொடரும் தனிப்படை போலீசாரின் வேட்டை: கஞ்சா விற்ற கோவை போலீஸ்காரர் கைது பரபரப்பு தகவல்கள்
புதுக்கோட்டையில் தொடரும் தனிப்படை போலீசாரின் வேட்டையில் கஞ்சா விற்ற கோவை போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.
புதுக்கோட்டை:
தனிப்படை போலீசார்
தமிழகத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கை எடுக்க டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து அந்தந்த மாவட்டங்களில் தனிப்படை அமைத்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்திலும் போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த ஒரிரு தினங்களில் மாவட்டத்தில் கஞ்சா விற்ற வழக்கில் 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதில் அறந்தாங்கி பகுதியில் மட்டும் 8 பேர் ஆவார்கள். இவர்களில் பெரும்பாலும் 19 முதல் 25 வயதிற்குட்பட்டவர்கள் ஆவார்கள். இவர்களிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்திய போது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கோவையில் இருந்து போலீஸ்காரர் ஒருவரிடம் கஞ்சா வாங்கி வந்து விற்றதாக தெரிவித்துள்ளனர்.
போலீஸ்காரர் கைது
இதையடுத்து போலீசார் கோவை சென்று விசாரணை நடத்திய போது அவரது பெயர் கணேஷ்குமார் (வயது 38) என்பதும், கோவையில் ஆயுதப்படை போலீஸ்காரராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீஸ்காரர் கணேஷ்குமாரை தனிப்படை போலீசார் கைது செய்து இன்று புதுக்கோட்டைக்கு அழைத்து வந்தனர். மேலும் இது தொடர்பாக அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கைதான போலீஸ்காரர் கணேஷ்குமாரிடம் இருந்து ½ கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.
கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த அவரிடம் இருந்து அறந்தாங்கி பகுதியை சேர்ந்தவர்கள் வாங்கி வந்து விற்றுள்ளனர். இவர்களுக்குள் பழக்கம் எப்படி ஏற்பட்டது? இதன் பின்னணியில் வேறு யாரேனும் உள்ளனர்களா? என தனிப்படை போலீசார் விசாரிக்கின்றனர். கஞ்சா விற்ற வழக்கில் போலீஸ்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story