பள்ளி வேன் மோதி சிறுவன் உயிரிழந்த விவகாரம்: பள்ளிக்கல்வித்துறை கடிதம்
பள்ளி வேன் மோதி சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் பள்ளிக்கல்வித்துறை பள்ளி நிர்வாகத்திற்கு உத்தரவு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
சென்னை,
சென்னை, ஆழ்வார்திருநகரில் தனியார் பள்ளிப் பேருந்து மோதி சிறுவன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக பள்ளி முதல்வர் மற்றும் போக்குவரத்து குழு உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 28ம் தேதி காலையில், ஆழ்வார்திருநகர் தனியார் பள்ளி வளாகத்தில் பேருந்து மோதியதில் 2ம் வகுப்பு மாணவன் தீக்சித் உயிரிழந்தான். இது தொடர்பாக சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நோட்டீஸ் அனுப்பி, விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டிருந்தார். இதற்கு விளக்கம் அளித்து பள்ளி நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்திருந்தது. அதில், தங்கள் மீது எந்த தவறும் இல்லை என்பதுபோன்ற பதிலை கூறியிருந்தது.
அதேசமயம், பள்ளி நிர்வாகத்தின் மெத்தன போக்கு காரணமாகவே இந்த விபத்து நடந்திருக்கிறது, எனவே கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர், பள்ளி நிர்வாகத்திற்கு உத்தரவு கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார். அதில், இந்த விபத்திற்கு பள்ளி நிர்வாகத்தின் மெத்தனப் போக்கு மற்றும் செயல்பாடுகள்தான் காரணம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக பள்ளி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், போக்குவரத்து குழுவில் இடம்பெற்றிருக்கும் உறுப்பினர்கள் மீதும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. எனவே, அவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story