இந்திய ஆடை ஏற்றுமதி 3 மடங்கு அதிகரிக்கும் - ஏ.இ.பி.சி. தலைவர் தகவல்


இந்திய ஆடை ஏற்றுமதி 3 மடங்கு அதிகரிக்கும் - ஏ.இ.பி.சி. தலைவர் தகவல்
x
தினத்தந்தி 4 April 2022 7:53 AM IST (Updated: 4 April 2022 7:53 AM IST)
t-max-icont-min-icon

இந்தியா-ஆஸ்திரேலியா வர்த்தக ஒப்பந்தத்தால் இந்தியாவின் ஆடை ஏற்றுமதி 3 மடங்கு அதிகரிக்கும் என்று ஏ.இ.பி.சி. தலைவர் நரேந்திர கோயங்கா கூறியுள்ளார்.

திருப்பூர், 

ஆஸ்திரேலியாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. ஏற்றுமதியாளர்கள் இதற்கு வரவேற்பு தெரிவித்து வருகிறார்கள். இந்தநிலையில் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் (ஏ.இ.பி.சி.) தலைவர் நரேந்திர கோயங்கா கூறியதாவது:-

வரவேற்பு

இந்த ஒப்பந்தம் மூலம் ஆயத்த ஆடைகள் உள்பட 96 சதவீதம் இந்திய பொருட்கள் வரி விலக்கு பெறும். இந்த ஒப்பந்தம் வரவேற்கத்தக்கது. உலகின் தெற்கு பிராந்தியத்தில் மிகப்பெரிய ஆடை இறக்குமதியாளராக ஆஸ்திரேலியா உள்ளது. இந்திய ஆடைகளுக்கு தற்போது ஆஸ்திரேலியாவில் 4.8 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. அதே சமயம் சீனா மற்றும் வங்கதேசத்தில் இருந்து வரும் ஆடைகளுக்கு பூஜ்ஜிய வரி அதாவது வரிவிலக்கு வழங்கப்படுகிறது.

செயற்கை இழை ஆடைகள்

இந்த ஒப்பந்தம் மூலம் அந்த வேறுபாடு களையப்படுவதுடன் உலக போட்டியாளர்களுக்கு இணையாக இந்திய ஆடைத்துறை போட்டித்தன்மை வாய்ந்ததாக மாறும். ஆஸ்திரேலியா தனது ஆடை இறக்குமதிக்காக சீனாவை பெரிதும் நம்பியுள்ளது. ஆஸ்திரேலியாவின் மொத்த ஆடை இறக்குமதியில் 3 சதவீதம் பங்கை இந்தியா தக்க வைத்துள்ளது. செயற்கை இழையால் உருவாக்கப்படும் டி-சர்ட்டுக்கு ஆஸ்திரேலியாவில் ஒரு பெரிய சந்தைஉள்ளது. அதேபோல் பின்னலாடையால் உருவாகும் ஜெர்சிகள், புல்ஓவர்கள் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும் திறன் இந்தியாவுக்கு உள்ளது.

இந்திய ஆடைத்துறை வசந்தகால மற்றும் கோடைகாலத்துக்கு ஏற்ற ஆடைகளை நல்ல முறையில் தயாரித்து வருகிறது. ஆனால் குளிர்கால ஆடைகளை அவ்வளவாக தயாரிப்பதில்லை. இதனால் இந்திய தொழிற்சாலைகள் குளிர்கால பொருட்களை உற்பத்தி செய்யும்போது அதன் முழுதிறனையும் பயன்படுத்துவதில்லை. ஆஸ்திரேலியாவில் வசந்தகால மற்றம் கோடைகால ஆடைகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

3 மடங்கு அதிகமாகும்

ஆண்டு முழுவதும் இந்தியா ஆடை உற்பத்தியை பயன்படுத்திக்கொள்ளலாம். வரும் 3 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவுக்கான இந்திய ஆடை ஏற்றுமதி 3 மடங்கு அதிகமாகும். இந்த ஒப்பந்தம் ஏற்றுமதி, வேலைவாய்ப்பு மற்றும் நாட்டின் ஆடைத்தொழிலில் முதலீடு ஆகிவற்றுக்கு மேலும் ஊக்கமளிக்கும் என அவர் கூறினார்.

Next Story