விருதுநகர் கூட்டு பாலியல் வன்கொடுமை: சிபிசிஐடி விசாரணை நிறைவு
விருதுநகரில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
விருதுநகர்,
விருதுநகர் மேல தெருவை சேர்ந்தவர் பால் வியாபாரி ஹரிஹரன் (வயது 27). இவர் 22 வயதான இளம் பெண்ணை காதலிப்பதாக கூறி நாடகமாடி உள்ளார்.
ஹரிஹரன் காதலிப்பதாக கூறியதை நம்பி அந்த பெண்ணும் அவருடன் நெருக்கமாக இருந்துள்ளார். இதனை ஹரிஹரன் அந்த பெண்ணுக்கு தெரியாமல் செல்போனில் வீடியோ எடுத்ததால், அவர் விரித்த வலையில் அந்த பெண் சிக்கினார்.
மேலும் இந்த வீடியோ காட்சியை ஹரிஹரன் தனது நண்பர்களான ரோசல்பட்டியை சேர்ந்த மாடசாமி (37), விருதுநகர் மொன்னி தெருவை சேர்ந்த ஜுனத்அகமது (27), பிரவீன் மற்றும் சில பள்ளி மாணவர்கள் என 8 பேருக்கு பகிர்ந்துள்ளார்.
இதனையடுத்து, இந்த கும்பலிலை சேர்ந்த அனைவரும் அந்த இளம்பெண்ணிடம் செல்போனில் எடுக்கபப்ட்ட வீடியோ காட்சியை சமூகவலைதளத்தில் பரப்பி விடுவோம் என மிரட்டியுள்ளனர். தங்களது ஆசைக்கும் இணங்க வேண்டும் என்று வற்புறுத்தி அந்த இளம்பெண்ணை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதனால், மன நெருக்கடிக்கு உள்ளான அந்த இளம்பெண் தனக்கு நடந்த கொடுமை குறித்து போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் இளம்பெண்ணை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த ஹரிஹரன், ஜூனத், 4 பள்ளிமாணவர்கள் உள்பட 8 பேரை கைது செய்தனர்.
இந்த கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி போலீசார் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஹரிஹரன், மாடசாமி, ஜுனத் அகமது, பிரவீன் மற்றும் 4 பள்ளி மாணவர்கள் உள்பட 8 பேரிடம் விசாரணை நடத்தினர். வழக்கில் தொடர்புடைய 4 பள்ளிமாணவர்களும் கூர்நோக்கி இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் சிபிசிஐடி விசாரணையை நிறைவு செய்துள்ளது. காவலில் எடுக்கப்பட்ட 4 பேரிடமும் 6 நாட்களாக சிபிசிஐடி நடத்திய விசாரணை நிறைவடைந்துள்ளது.
இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் சிபிசிஐடி விசாரணை நிறைவடைந்ததையடுத்து ஹரிஹரன், ஜுனத் அகமது, பிரவீன், மாடசாமி ஆகிய 4 பேரும் ஸ்ரீவில்லிபுத்தூர் வன்கொடுமை தடுப்பு கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்தப்படுகின்றனர்.
Related Tags :
Next Story