போதை மாத்திரைக்கு அடிமையாக்கி இளம்பெண்களை விபசாரத்தில் தள்ளும் கும்பல்
இளம்பெண்களை போதை மாத்திரைக்கு அடிமையாக்கி விபசாரத்தில் தள்ளி சீரழிக்கும் குமபல் தலைவன் சிக்கினான்.
சென்னை
வடசென்னை பகுதியில் போதை மாத்திரை கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. கடந்த 2 வாரத்தில் 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 5 ஆயிரத்துக்கும் அதிகமான போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் இளம்பெண்களை போதை மாத்திரைக்கு அடிமையாக்கி அவர்களை விபசாரத்தில் தள்ளி சீரழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வண்ணாரப்பேட்டை, தங்கச்சாலை மேம்பாலம் அருகே கண்ணன் ரவுண்டானாவில் இன்ஸ்பெக்டர் பிரான்வின்டேனி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த சொகுசு காரை நிறுத்தி விசாரித்தனர்.
அதில் இருந்த வாலிபர் மற்றும் 2 பெண்கள் போதை மயக்கத்தில் இருந்தனர். காரில் சோதனை செய்த போது மெத்தம்பெட்டமின் போதை மாத்திரைகள், எல்.எஸ்.டி. போதை ஸ்டாம்புகள் இருந்தன.
விசாரணையில் அவர்கள் அண்ணாநகரைச் சேர்ந்த பாலசுப்பிரமணி மற்றும் தென்காசி, சென்னையைச் சேர்ந்த இளம்பெண்கள் என்பது தெரிந்தது.
மேலும் பாலசுப்பிரமணி இளம்பெண்களை போதை மாத்திரைக்கு அடிமையாக்கி அவர்களை சீரழித்து விபசாரத்தில் தள்ளியதும் தெரிய வந்தது.
இதையடுத்து பிடிபட்ட பாலசுப்பிரமணியன் மற்றும் 2 பெண்களையும் போலீசார் விசாரணைக்காக தண்டையார்பேட்டை மகளிர் போலீசில் ஒப்படைத்தனர். அவர்களிடம் இன்ஸ்பெக்டர் பிரியதர்ஷினி நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
பிடிபட்ட பாலசுப்பிரமணியன் வடசென்னை பகுதியில் போதை மாத்திரை விற்கும் கும்பல் தலைவனாக செயல்பட்டு உள்ளான்.
இளம்பெண்களை குறி வைத்து அவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்று இருக்கிறார். போதைக்கு அடிமையானதும் ஒரு கட்டத்தில் அவர்களுக்கு போதை மாத்திரைகளை கொடுக்காமல் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து இருக்கிறார்.
பின்னர் போதைக்கு அடிமையான இளம்பெண்களிடம் உல்லாசமாக இருந்து விட்டு அவர்களை விபசாரத்தில் தள்ளி இருப்பது தெரிந்தது.
இதையடுத்து பாலசுப்பிரமணியன் மீது கற்பழிப்பு உள்ளிட்ட 2 பிரிவில் வழக்குப்பதிவு செய்து தண்டையார்பேட்டை மகளிர் போலீசார் கைது செய்தனர். அவருடன் இருந்த 2 இளம்பெண்களையும் மீட்டு அறிவுரை கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
பாலசுப்பிரமணியனுக்கு சென்னையில் போதை மாத்திரை விற்கும் பல்வேறு கும்பலுடன் நெருங்கிய தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களையும் கூண்டோடு பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதே போல் ஏராளமான பெண்கள் பாலசுப்பிரமணியனிடம் சிக்கி சீரழிந்து உள்ளனர். அவர்களை பற்றி ரகசிய விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story