தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் 97.05 சதவீதம் நகைக்கடன் தள்ளுபடி..!


கோப்புப் படம்
x
கோப்புப் படம்
தினத்தந்தி 4 April 2022 6:15 PM IST (Updated: 4 April 2022 6:15 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் தகுதி வாய்ந்த 97.05 சதவீதம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,
 
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

 "தமிழகத்தில் 5 சவரனுக்குட்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று  முதல்-அமைச்சர்  மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். இதைத் தொடர்ந்து போலி நகைகளை அடகு வைத்தும் மற்றும் முறைகேடாக நகைக்கடன் பெற்றது போன்றவை அடையாளம் காண ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஒரு வாரமாக தகுதியான நபர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கான சான்றிதழ் மற்றும் நகைகள் பயனாளிகளுக்கு திருப்பி அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் சுமார் 14,51,042 பயனாளிகளுக்கு ரூ.5,296 கோடி அளவிற்கு 5 சவரனுக்குட்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் தற்போது வரை தகுதியுள்ள 12,19,106 பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதாவது, தகுதி வாய்ந்த 97.05 சதவீதம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எஞ்சிய பயனாளிகளுக்கும் விரைவில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும்.

பயிர்க்கடன் அடிப்படையில் ரூ.10,000 கோடி பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story