மேம்பாலத்தில் ஆட்டோக்களை நிறுத்தி டிரைவர்கள் முற்றுகை


மேம்பாலத்தில் ஆட்டோக்களை நிறுத்தி டிரைவர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 4 April 2022 7:49 PM IST (Updated: 4 April 2022 7:49 PM IST)
t-max-icont-min-icon

புதுவையில் ஆட்டோ தகுதி சான்றிதழ் பெறுவதற்கான கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து மேம்பாலத்தில் ஆட்டோக்களை நிறுத்தி ஆர்.டி.ஓ. அலுவலகத்தை டிரைவர்கள் முற்றுகையிட்டனர்.

புதுவையில் ஆட்டோ தகுதி சான்றிதழ் பெறுவதற்கான கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து மேம்பாலத்தில் ஆட்டோக்களை நிறுத்தி ஆர்.டி.ஓ. அலுவலகத்தை டிரைவர்கள் முற்றுகையிட்டனர்.
பல மடங்கு உயர்வு
புதுவையில் ஆட்டோ தகுதி சான்றிதழ் (எப்.சி) பெறுவதற்கான கட்டணம் ரூ.700-ல் இருந்து ரூ.4 ஆயிரத்து 600 ஆக உயர்த்தப்பட்டது. இதை கண்டித்தும், கட்டண உயர்வை திரும்பப் பெறக் கோரியும் ஆட்டோ டிரைவர்கள் சங்கத்தினர் (ஏ.ஐ.டி.யு.சி.) போக்குவரத்து துறை அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்திருந்தனர். 
அதன்படி இன்று காலை 100 அடி சாலையில் உள்ள போக்குவரத்து அலுவலகத்தை (ஆர்.டி.ஓ.) ஆட்டோக்களுடன் வந்து முற்றுகையிட்டு ஆட்டோ டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கட்டண உயர்வை கண்டித்து அவர்கள் கோஷங்கள் எழுப்பினார்கள். 
இந்த போராட்டத்துக்கு ஏ.ஐ.டி.யு.சி. ஆட்டோ சங்க பொதுச்செயலாளர் சேதுசெல்வம் தலைமை தாங்கினார். மாநில தலைவர் சேகர், பொருளாளர் செந்தில்முருகன், துணைத்தலைவர்கள் பாளையத்தான், ரவிச்சந்திரன், சிவசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஆட்டோக்களை நிறுத்தி மறியல்
அப்போது 100 அடி சாலை மேம்பாலத்தில் 200-க்கும் மேற்பட்ட ஆட்டோக்களை குறுக்கும் நெடுக்குமாக நிறுத்தி திடீரென மறியலில் ஈடுபட்டனர். இந்தநிலையில் அவர்கள் போக்குவரத்து துறை அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
மேம்பாலத்தில் இந்திராகாந்தி சிலையில் இருந்து கடலூர் செல்லும் பகுதியில் மோட்டார் சைக்கிள், கார், லாரி என வாகனங்கள் அனைத்தும் அணிவகுத்து நின்றன. 
இந்தநிலையில் வெயிலும் கடுமையாக கொளுத்தியதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் சிலர் ஆட்டோவை நகர்த்தி இரு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதிக்குமாறு வலியுறுத்தினார்கள். ஆனால் அதற்கு ஆட்டோ டிரைவர்கள் சம்மதிக்காமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுமக்கள் வாக்குவாதம்
இதனால் வேறு வழியின்றி இருசக்கர வாகன ஓட்டிகள் தடுப்பு கட்டைகளின் மீது தங்களது வாகனங்களை தூக்கி ஏற்றி மறு பக்க மேம்பால சாலையின் வழியாக மீண்டும் இந்திராகாந்தி சிலை நோக்கி சென்றனர். வாகனங்களை தூக்க முடியாதவர்கள் வெயிலிலேயே நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் குழந்தைகளுடன் வந்தவர்கள், பெண்கள், வயதானவர்கள் கடும் அவதிக்குள்ளாயினர்.
ஒருகட்டத்தில் பொதுமக்களில் சிலர் மீண்டும் ஆட்டோ டிரைவர்களுடன் வழி ஒதுக்கி விடுமாறு கேட்டனர். அப்போதும்  ஆட்டோக்களை நகர்த்த மறுத்து, பொதுமக்களுக்காகத்தான் போராட்டம் நடத்துவதாக தெரிவித்தனர். இப்போது தகுதி கட்டணத்தை உயர்த்தினால் அதற்காக பொதுமக்களிடம்தான் நாங்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்க வேண்டியிருக்கும் என்று தெரிவித்தனர்.
இதை ஏற்காத பொதுமக்கள், கடந்த வாரம்தான் விலைவாசி உயர்வு பிரச்சினைக்காக ‘பந்த்’ போராட்டம் நடத்தினீர்கள். இப்போது மறியல் என்று எங்களை துன்புறுத்துவது நியாயமா? என்று கேட்டனர். தொடர்ந்து ஆட்டோ டிரைவர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
வேடிக்கை பார்த்த போலீஸ்
ஒரு கட்டத்தில் பொதுமக்களும், ஒரு சில ஆட்டோ டிரைவர்களும் கைகலப்பில் ஈடுபடும் சூழ்நிலை உருவானது. இதையெல்லாம் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைகட்டி வேடிக்கை பார்த்தபடி நின்றனர். சில போலீசார் வாக்குவாதம் நடந்த இடத்தில் இருந்து நைசாக உருவினர்.
அந்த சமயத்தில் போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார் அங்கு வந்தார். அவர் ஆட்டோ டிரைவர்களிடம் ஒரு பக்க சாலையில் உள்ள ஆட்டோக்களையாவது அப்புறப்படுத்தி பொதுமக்கள் செல்ல வழி ஏற்படுத்துமாறு கூறினார். அவருடனும் ஆட்டோ டிரைவர்கள் வாக்குவாதம் செய்தனர்.
நிலைமை எல்லை மீறி போவதை உணர்ந்த போலீசார் உடனடியாக சில ஆட்டோக்களை நகர்த்தி பொதுமக்கள் செல்ல வழி ஏற்படுத்தினார்கள். அதன்பிறகே பொதுமக்கள் அங்கிருந்து செல்ல முடிந்தது. இதன் காரணமாக 100 அடி சாலை மேம்பாலத்தில் சுமார் 1 மணிநேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போக்குவரத்து நெரிசல்
இதனிடையே 100 அடி சாலையில் வாகனங்கள் செல்ல முடியாததால் கடலூரில் இருந்து வந்த வாகனங்கள் சிமெண்டு ரோடு வழியாக திருப்பி விடப்பட்டன. கடலூர் நோக்கி சென்ற வாகனங்கள் பஸ் நிலைய பகுதி வழியாக மாற்றிவிடப்பட்டன. ஏற்கனவே அண்ணா நகர் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி முடிவடையாத நிலையில் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்திராகாந்தி சிலை முதல் நெல்லித்தோப்பு சிக்னல் வரையிலும் வாகனங்கள் நகர முடியாத அளவுக்கு நெரிசல் ஏற்பட்டது. அங்குலம் அங்குலமாக வாகனங்களை நிறுத்தி வாகன ஓட்டிகள் அங்கிருந்து சென்றனர். ஆட்டோ டிரைவர்களின் இந்த மறியல் போராட்டத்தால் ஏற்பட்ட போக்குவரத்து நெருக்கடி சகஜ நிலைக்கு திரும்ப சுமார் 2 மணிநேரத்துக்கு மேலானது.

Next Story