பெரிய மார்க்கெட் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
புதுவை பெரிய மார்க்கெட் பகுதியை சுற்றிலும் போக்குவரத்து போலீசார் ஆக்கிரமிப்புகளை அகற்றி வாகனங்கள் நிறுத்துவதை முறைப்படுத்தினர்.
புதுவை பெரிய மார்க்கெட் பகுதியை சுற்றிலும் போக்குவரத்து போலீசார் ஆக்கிரமிப்புகளை அகற்றி வாகனங்கள் நிறுத்துவதை முறைப்படுத்தினர்.
போக்குவரத்து நெருக்கடி
புதுவை பெரிய மார்க்கெட் பகுதியை சுற்றிலும் ஏராளமான சிறு வியாபாரிகள் சாலைகளில் கடை அமைத்து உள்ளனர். அந்த பகுதியில் கடை வைத்துள்ளவர்கள், வேலை செய்பவர்கள் ஆங்காங்கே தாறுமாறாக 2 சக்கர வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர்.
இதனால் பெரிய மார்க்கெட் பகுதியில் நேரு வீதி, பாரதி வீதி, காந்தி வீதி, ரங்கப்பிள்ளை வீதி பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. பெரிய மார்க்கெட்டிற்கு வருபவர்கள் வாகனங்களை நிறுத்தவும், வீதிகளில் நடந்து செல்லவும்கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்பு அகற்றம்
மார்க்கெட் வாசல் பகுதிகளை ஆக்கிரமித்து கடை வைத்திருப்பவர்களால் பொதுமக்கள் மார்க்கெட்டிற்குள் செல்ல முடியாத சூழ்நிலையும் நிலவுகிறது. இதுதொடர்பாக புதுவை போக்குவரத்து போலீசாருக்கு புகார்கள் சென்றன.
இதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு மாறன் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் கீர்த்திவர்மன், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேச பெருமாள் மற்றும் போலீசார் இன்று பெரிய மார்க்கெட்டை சுற்றியுள்ள பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றினார்கள். மேலும் தாறுமாறாக வாகனங்களை நிறுத்தியிருந்தவர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்தனர்.
எச்சரிக்கை
கடைகளில் பணியாற்றும் ஊழியர்களின் வாகனங்களை பழைய சிறை வளாகத்தில் உள்ள பார்க்கிங் பகுதியில் நிறுத்த அறிவுறுத்தினார்கள். அதைத்தொடர்ந்து ஊழியர்கள் பலரும் தங்கள் வாகனங்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். மேலும் பொதுமக்களும் தங்களது வாகனங்களை முறையாக நிறுத்தினார்கள்.
இதன் காரணமாக பெரிய மார்க்கெட் பகுதியை சுற்றியுள்ள வீதிகளில் வாகன நெரிசலின்றி காணப்பட்டது. இந்தநிலை தொடர வேண்டும் என்றும் மீண்டும் தாறுமாறாக வாகனங்களை நிறுத்தினால் அவற்றை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படும் என்றும் இன்ஸ்பெக்டர் கீர்த்திவர்மன் எச்சரிக்கை விடுத்தார்.
Related Tags :
Next Story