அரசு பிற்படுத்தப்பட்டோர் விடுதி மாணவருக்கான புதிய உணவு பட்டியல் அரசாணை வெளியீடு


அரசு பிற்படுத்தப்பட்டோர் விடுதி மாணவருக்கான புதிய உணவு பட்டியல் அரசாணை வெளியீடு
x
தினத்தந்தி 5 April 2022 12:25 AM IST (Updated: 5 April 2022 12:25 AM IST)
t-max-icont-min-icon

பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் அரசு விடுதிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுக்கான புதிய பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

சென்னை,

பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மைச் செயலாளர் ஆ.கார்த்திக் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகம் முழுவதும் 1,354 பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் விடுதிகள் செயல்படுகின்றன. அங்கு தங்கிப் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி, ஐ.டி.ஐ. மாணவர் விடுதிகள் மற்றும் பள்ளி விடுதிகள் என தனித்தனியே வகைப்படுத்தப்பட்டு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

9.7.2021 அன்று இந்த விடுதிகள் தொடர்பாக முதல்-அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில், விடுதி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவுக்காக பெறப்படும் கட்டணத்தில் மாற்றம் இல்லாமல் புதிய உணவுப் பட்டியல் தயாரிக்கும்படி அறிவுறுத்தப்பட்டது.

கட்டணத்தில் மாற்றமில்லை

இதுதொடர்பாக பிற்படுத்தப்பட்டோர் நல இயக்குனரின் கருத்துரு பெறப்பட்டது. அதில், ஓட்டல் மேலாண்மை கல்வி நிறுவனம் பரிந்துரைத்துள்ள பட்டியலின் அடிப்படையில் காலை, மதியம், இரவு உணவுகள், சிறப்பு உணவு மற்றும் மாலை சிற்றுண்டி ஆகியவற்றை அட்டவணைப்படுத்தலாம் என்று பரிந்துரைத்துள்ளார்.

அவரது கருத்துருவை அரசு கவனமுடன் பரிசீலித்து ஏற்றுக்கொண்டு, இந்தத் துறையின் கீழ் செயல்படும் அனைத்து பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் விடுதி மாணவ, மாணவிகளுக்கு உணவுக் கட்டணம் மாற்றப்படாமல் உணவுப் பட்டியலை மாற்றி அமைத்து அட்டவணைப்படுத்தி உத்தரவிட்டுள்ளது.

மேலும், தோசைக்கல், இடியாப்பம் அச்சு எந்திரம் ஆகியவற்றை விடுதி பராமரிப்பு செலவுத் தொகையில் இருந்து வாங்க அரசு அனுமதித்து ஆணையிட்டுள்ளது.

காலை உணவு

அதன்படி, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர் விடுதிகளில் காலை உணவாக, திங்கள்கிழமை - சேமியா கிச்சடி, தக்காளி சட்னி அல்லது சாம்பார்; செவ்வாய்கிழமை - பூரி மசால்; புதன்கிழமை - இட்லி, சாம்பார், சட்னி; வியாழக்கிழமை - இடியாப்பம், பட்டாணி குருமா அல்லது தேங்காய் பால்; வெள்ளிக்கிழமை - பொங்கல் அல்லது வரகு பொங்கல் அல்லது தினை அரிசி பொங்கல், கத்தரிக்காய் கொத்சு, வடை; சனிக்கிழமை - ரவா கிச்சடி, தேங்காய் சட்னி; ஞாயிற்றுக்கிழமை - தோசை அல்லது நவதானிய தோசை, சாம்பார், சட்னி.

மதிய உணவு

திங்கள்கிழமை - சாதம், சாம்பார், இருவகை பொரியல், ரசம், மோர், முட்டை; அல்லது சாதம், சாம்பார், ஒரு பொரியல், ரசம், மோர் முட்டை மசாலா; செவ்வாய்கிழமை - காய்கறி பிரியாணி, காய்கறி குருமா, முட்டை;

புதன்கிழமை - சாதம், ஆட்டிறைச்சி (கோழி குருமா); அல்லது மட்டன் அல்லது சிக்கன் குழம்பு, பொரியல், மோர்; வியாழக்கிழமை - தக்காளி சாதம் அல்லது லெமன் சாதம் அல்லது தயிர் சாதம், உருளை பொரியல், முட்டை; வெள்ளிக்கிழமை - சாதம், காரக் குழம்பு, பொரியல் (அல்லது கூட்டு), ரசம், மோர், முட்டை; சனிக்கிழமை - புதினா சாதம் அல்லது காரட் சாதம் அல்லது கறிவேப்பிலை சாதம், முட்டை, அப்பளம் (பருப்பு துவையல்) ; ஞாயிற்றுக்கிழமை - சாதம், முட்டை குருமா, ரசம், மோர்.

இரவு உணவு

திங்கள்கிழமை - சப்பாத்தி, குருமா; செவ்வாய்கிழமை - இடியாப்பம், குருமா (அல்லது காய்கறி கூட்டு) ; புதன்கிழமை - காய்கறி புலாவ், குருமா (அல்லது ரைத்தா) ; வியாழக்கிழமை - ஊத்தாப்பம், சட்னி, சாம்பார்; வெள்ளிக்கிழமை - கோதுமை தோசை, தக்காளி சட்னி; சனிக்கிழமை - சாதம், சாம்பார், பொரியல், ரசம்; ஞாயிற்றுக்கிழமை - தக்காளி சாதம் அல்லது சாம்பார் சாதம், வறுவல்;

வாரத்திற்கு ஒரு நாள்

1-வது வாரம் மற்றும் 3-வது வாரம் புதன்கிழமையில் கல்லூரி விடுதியில் ஆட்டிறைச்சி (80 கிராம் வீதம்); பள்ளி விடுதிகளில் ஆட்டிறைச்சி (80 கிராம் வீதம்) ;

2-வது வாரம் மற்றும் 4-வது வாரம் புதன்கிழமையில் கல்லூரி விடுதியில் கோழி இறைச்சி (120 கிராம் வீதம்); பள்ளி விடுதியில் கோழி இறைச்சி (100 கிராம் வீதம்);

நாள்தோறும் வழங்கப்படும் உணவு வகைகளுடன் வாரத்திற்கு 5 முட்டைகள் என ஒரு மாதத்திற்கு ஒரு மாணவருக்கு 20 முட்டைகள் வழங்கப்படும். முட்டை சாப்பிடாத மாணவருக்கு ஒரு வாழைப்பழம் வழங்கப்படும்.

சிற்றுண்டி

நாள்தோறும் மாலை நேரங்களில் வேக வைத்த பயறுகள் (சுண்டல்) மற்றும் சுக்குமல்லி காபி அல்லது கருப்பட்டி தேநீர் வழங்கப்படும். பண்டிகை காலத்தில் வழங்கப்படும் சிறப்பு உணவில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story