அவசர காலங்களில் பொதுமக்கள் போலீசாரின் உதவியை நாடுவதற்கு ‘காவல் உதவி' செயலி


அவசர காலங்களில் பொதுமக்கள் போலீசாரின் உதவியை நாடுவதற்கு ‘காவல் உதவி செயலி
x
தினத்தந்தி 5 April 2022 4:39 AM IST (Updated: 5 April 2022 4:39 AM IST)
t-max-icont-min-icon

பொதுமக்கள் அவசர காலங்களில் போலீசாரின் உதவியை உடனடியாக பெறும் பொருட்டு ‘காவல் உதவி’ செயலி பயன்பாட்டை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச்செயலகத்தில், ‘காவல் உதவி’ செயலியை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், தலைமைச்செயலாளர் இறையன்பு, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் எஸ்.கே.பிரபாகர், போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, சைபர் கிரைம் டி.ஜி.பி. அமரேஷ் புஜாரி, மாநில குற்ற ஆவண பிரிவு கூடுதல் டி.ஜி.பி. வினித் தேவ் வான்கேடே மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பொதுமக்கள் குறிப்பாக பெண்கள், அவசர காலங்களில் போலீசாரின் உதவியை உடனடியாக பெறும் பொருட்டு, 60-க்கும் மேற்பட்ட சிறப்பு அம்சங்களுடன் ‘காவல் உதவி’ செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியானது இந்திய மாநில காவல்துறையில் உருவாக்கப்பட்டுள்ள செயலிகளில் முதன்மையாக விளங்கும்.

துரித சேவை

பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் அவசர காலங்களில் இந்த செயலியில் சிவப்பு நிற ‘அவசரம்' என்ற பொத்தானை அழுத்துவதன் மூலமாக, பயனாளர் விவரம், தற்போதைய இருப்பிட விவரம் மற்றும் வீடியோ, கட்டுப்பாட்டு அறையில் பெறப்பட்டு காவல்துறையின் அவசரசேவை வழங்கப்படும். பயனாளர்கள் செல்போனில் நேரடி புகார்களை தெரிவிக்க “டயல்-100’’ என்ற செயலி “காவல் உதவி’’ செயலி மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது. பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணில் இருந்து அழைப்பதால், பயனாளர் விவரம் மற்றும் தற்போதைய இருப்பிட விவரம் அறியப்பட்டு துரித சேவை வழங்கப்படும்.

மகளிர், சிறார்கள், முதியோர்கள் அவசர கால புகார்களை, படங்கள், குறுகிய அளவிலான வீடியோவை பதிவேற்றம் செய்து, செல்போனில் புகாரை பதிவு செய்யலாம். பயணங்கள் மேற்கொள்ளும்போது, அவசர காலத்தில் பயனாளர்கள், ‘வாட்ஸ் அப்’, ‘கூகுள் மேப்’ வாயிலாக, நேரடி இருப்பிட விவரங்களை நண்பர் அல்லது உறவினருடன் பரிமாறும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பயனாளர்களின் உறவினர் அல்லது நண்பர் வாயிலாக செல்லும் இருப்பிடம் அறியப்பட்டு, போலீசார் விரைந்து செல்ல வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

பதிவிறக்கம் செய்யலாம்

மேலும், போலீஸ் நிலைய இருப்பிடம் மற்றும் நேரடி அழைப்பு வசதி, காவல் கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி விவரம் அறிதல், இணைய வழி பொருளாதார குற்றம் தொடர்பான புகார்கள், இதர அவசர, புகார் உதவி எண் அழைக்கும் வசதி, அவசர கால அறிவிப்புகள், இதர தகவல்கள் அறியும் வசதி, வாகன விவரம் அறிதல், போக்குவரத்து விதிமீறல் அபராதம் செலுத்தும் வசதி.

தனிநபர் குறித்த சரிபார்ப்பு சேவை, தொலைந்த ஆவணங்கள் குறித்த புகார், சி.எஸ்.ஆர், எப்.ஐ.ஆர். குறித்த விவரம், காவல்துறையின் சமூக ஊடக சேவைகள், காவல்துறையின் குடிமக்கள் சேவை செயலி, ‘112 இந்தியா' ஆகிய வசதிகளையும் இச்செயலி மூலம் பொதுமக்கள் பெற்று பயன்பெறலாம். இச்செயலியை ‘கூகுள் பிளே ஸ்டோரில்’ இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story