நோயாளியுடன் சென்ற ஆம்புலன்சு தீப்பிடித்து எரிந்தது


நோயாளியுடன் சென்ற ஆம்புலன்சு தீப்பிடித்து எரிந்தது
x
தினத்தந்தி 6 April 2022 12:23 AM IST (Updated: 6 April 2022 12:23 AM IST)
t-max-icont-min-icon

நோயாளியுடன் சென்ற ஆம்புலன்சு தீப்பிடித்து எரிந்தது தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.

சென்னை,

சென்னை மேடவாக்கத்தை சேர்ந்தவர் நடராஜ் (வயது 78). இவர் ஆந்திரா மாநிலம் சித்தூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக தனியார் ஆம்புலன்சை வரவழைத்து நேற்று அதிகாலை சித்தூருக்கு புறப்பட்டுள்ளார். ஆம்புலன்சை ராபின் (40) என்பவர் ஓட்டி வந்துள்ளார்.

கீழ்ப்பாக்கம் அழகப்பா நகர் நியூ ஆவடி சாலையில் ஆம்புலன்சு வந்துகொண்டிருந்தபோது, ஆம்புலன்சு வாகனத்தினுள் இருந்து திடீரென கரும்புகை வெளியேறி உள்ளது. இதைக்கண்ட டிரைவர் உடனடியாக ஆம்புலன்சை நிறுத்தினார். பின்னர் வாகனத்தினுள் இருந்த நடராஜை கீழே இறக்கிவிட்டு, தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், கரும்புகை தீயாக மாறி ஆம்புலன்சு வாகனம் முழுவதும் கொளுந்துவிட்டு எரிந்தது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வில்லிவாக்கம் மற்றும் கீழ்ப்பாக்கம் தீயணைப்பு நிலைய வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ஆம்புலன்சு வாகனம் முற்றிலும் எரிந்து நாசமானது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த டி.பி.சத்திரம் போலீசார் ஆம்புலன்சு வாகனத்தில் தீ விபத்து எப்படி நடந்தது? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story