திண்டுக்கல்: புகையிலைப்பட்டி ஜல்லிக்கட்டு போட்டியில் 600 காளைகள் பங்கேற்பு...!
திண்டுக்கல் அருகே புகையிலைப்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 600 காளைகள் பங்கேற்றனர்
திண்டுக்கல்,
திண்டுக்கல் சாணார்பட்டி அருகே மடூர் ஊராட்சிக்கு உட்பட்ட புகையிலைப்பட்டியில் புனித சந்தியாகப்பர், புனித செபஸ்தியார் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்தப்படும்.
அதன்படி இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது. இதையொட்டி திண்டுக்கல்,தேனி,மதுரை,விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் அழைத்து வரப்பட்டன.கால்நடைகளை மண்டல இணை இயக்குனர் முருகன்,உதவி இயக்குனர் ஆறுமுகராஜ் கால்நடை மருத்துவர்கள் காளைகளை பரிசோதனை செய்து ஜல்லிக்கட்டில் 600 காளைகள் பங்கேற்க அனுமதி வழங்கினர்.
இதேபோல் மாடுபிடி வீரர்களுக்கு டாக்டர் ஹக்கீம் சையது தலைமையில் டாக்டர் இந்திரப்பிரியா ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் மாடுபிடி வீரர்களை பரிசோதனை செய்து காளைகள் பிடிக்க அனுமதித்தனர்.
இதையடுத்து காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்கியது. இதை கோட்டாட்சியர் பிரேம்குமார் தொடங்கி வைத்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் முன்னிலை வகித்தார். இதில் கிழக்கு தாசில்தார் சந்தன மேரி கீதா, மண்டல துணை வட்டாட்சியர் தங்கமணி ஆகியோர் உடனிருந்தனர்.
முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதனை யாரும் பிடிக்கவில்லை. அதன்பின் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன.
சில காளைகள் யாரிடமும் பிடிபடாமல் சீறிப் பாய்ந்து சென்று தனது உரிமையாளருக்கு பரிசுகளை பெற்றுக் கொடுத்தது. காளைகளை மாடுபிடி வீரர்கள் லாவகமாக பிடித்தனர். சில காளைகள் மைதானத்தில் நீண்ட நேரம் நின்று விளையாடின.
இதனை பார்த்த பார்வையாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். கம்பீரமான காளைகளை பிடிக்க வந்த வீரர்களுக்கு காளைகள் போக்கு காட்டி அவர்களை முட்டித் தள்ளின.
இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்று பிடிபடாத மாடுகள் மற்றும் காளைகளை பிடித்த மாடுபிடி வீரர்களுக்கு சைக்கிள், வெள்ளிக்காசு,பிரிட்ஜ், ஆட்டு குட்டி,அண்டா, பானை, கட்டில், பீரோ உள்ளிட்ட பல பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
Related Tags :
Next Story