நாட்டு வெடிகுண்டுகளுடன் பிரபல ரவுடி கைது


நாட்டு வெடிகுண்டுகளுடன் பிரபல ரவுடி கைது
x
தினத்தந்தி 6 April 2022 8:00 PM IST (Updated: 6 April 2022 8:00 PM IST)
t-max-icont-min-icon

சேதராப்பட்டு அருகே போலீஸ் வாகன சோதனையில் 5 கொலைகளில் தொடர்புடைய பிரபல ரவுடி நாட்டு வெடிகுண்டுகளுடன் கைது செய்யப்பட்டார்.

சேதராப்பட்டு அருகே போலீஸ் வாகன சோதனையில் 5 கொலைகளில் தொடர்புடைய பிரபல ரவுடி நாட்டு வெடிகுண்டுகளுடன் கைது செய்யப்பட்டார். 
வாகன சோதனையில் சிக்கினார்
புதுவை வடக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு பக்தவச்சலம் உத்தரவின்பேரில் சேதராப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் இன்று வழுதாவூர் சாலை பத்மாவதி நகரில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த வாலிபர் ஒருவரை வழிமறித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். 
இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர் வந்த மோட்டார் சைக்கிளில் சோதனை போட்ட போது அதில் இருந்த பெட்டியில் தவிடு நிரப்பிய பையில் உருண்டையாக மர்ம பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 
இதுபற்றி அவரிடம் விசாரித்ததில் கிரிக்கெட் விளையாட பந்தை எடுத்துச் செல்வதாக கூறினார். ஆனாலும் அதை போலீசார் வெளியே எடுத்து பார்த்ததில் அவை நாட்டு வெடிகுண்டுகள் என்பது தெரிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
கொலை வழக்குகள்
உடனே அங்கிருந்த அந்த வாலிபர் போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓட முயன்றார். உஷாரான போலீசார் அந்த வாலிபரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். 
விசாரணையில் அவர் பெரிய காலாப்பட்டு சுனாமி குடியிருப்பை சேர்ந்த பெரியசாமி மகன் பிரபல ரவுடி சுமன் என்கிற பிரதீப் (வயது 29) என்பது தெரியவந்தது. மேலும் இவர் மீது 5 கொலை, 5 கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. 
இந்தநிலையில் திருபுவனையில் கஞ்சா வழக்கில் கைதாகி காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சுமன் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார்.
தற்போது துத்திப்பட்டில் உள்ள மனைவியை பார்த்து விட்டு திரும்பியதும் தனது பாதுகாப்புக்காக தானே வெடிகுண்டுகள் தயாரித்து எடுத்து வந்ததும் தெரியவந்தது.
 சிறையில் அடைப்பு
இதையடுத்து சுமன் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 2 நாட்டு வெடிகுண்டுகள், மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். 
இதன்பின் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் சுமன் அடைக்கப்பட்டார். தொடர்ந்து அவரை கோர்ட்டு அனுமதியின்பேரில் காவலில் எடுத்து விசாரிக்கவும் சேதராப்பட்டு போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Next Story