நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை


நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை
x
தினத்தந்தி 7 April 2022 3:19 AM IST (Updated: 7 April 2022 3:19 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. வள்ளியூரில் ரெயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

வள்ளியூர்:
வெப்பச்சலனம் காரணமாக கடந்த 2-ந் தேதி முதல் நெல்லை மாவட்ட அணை பகுதிகளிலும், தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் லேசான மழை பெய்தது. இருந்தாலும் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. பாளையங்கோட்டையில் கடந்த ஒரு வாரமாக வெயில் அளவு 100 டிகிரியை தாண்டியது. இதனால் மக்கள் சாலைகளில் செல்ல முடியாத அளவிற்கு அனல் காற்று வீசியது.

இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் நேற்று கோபாலசமுத்திரம், பிராஞ்சேரி பகுதியில் சுமார் ½ மணி நேரம் பரவலாக மழை பெய்தது. நெல்லை மாநகர பகுதியில் சில இடங்களில் சாரல் மழை பெய்தது.

இதுதவிர அம்பை, சேரன்மாதேவி, மணிமுத்தாறு பகுதிகளில்  பரவலாக மழை பெய்தது. வள்ளியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியம் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.  சுமார் ½ மணி நேரம் பெய்த இந்த மழையின் காரணமாக வள்ளியூர்- திருச்செந்தூர் மெயின் ரோட்டில் உள்ள ரெயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் குளம் போல் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

தென்காசி மாவட்டத்தில் தென்காசி, ஆய்க்குடி, கடையம், ராமநதி அணைப்பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. நேற்று சேரன்மாதேவியில் 13 மில்லி மீட்டரும், அம்பையில் 6 மி.மீ, மணிமுத்தாறில் 18 மி.மீ, ஆய்க்குடியில் 4 மி.மீ, ராமநதியில் 5 மி.மீ. மழை பதிவாகி இருந்தது.

Next Story