2 ஆண்டுகளுக்கு பிறகு மெரினா மாநகராட்சி நீச்சல் குளம் திறப்பு


2 ஆண்டுகளுக்கு பிறகு மெரினா மாநகராட்சி நீச்சல் குளம் திறப்பு
x
தினத்தந்தி 7 April 2022 3:58 AM IST (Updated: 7 April 2022 3:58 AM IST)
t-max-icont-min-icon

2 ஆண்டுகளுக்கு பிறகு மெரினா மாநகராட்சி நீச்சல் குளம் நேற்று திறக்கப்பட்டது. இளைஞர்கள் உற்சாகத்துடன் வந்து குளித்து மகிழ்ந்தனர்.

சென்னை,

சென்னை மெரினா கடற்கரையில் மாநகராட்சி சார்பில் நீச்சல் குளம் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த நீச்சல் குளத்தில் பள்ளி மாணவ-மாணவிகள், விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். மேலும், மூளை வளர்ச்சி குன்றிய சிறுவர்கள், மாநகராட்சி பள்ளி மாணவர்கள், மாநகராட்சி ஊழியர்களின் குழந்தைகளுக்கு இலவசமாகவும் நீச்சல் குளத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

வாரத்தில் திங்கட்கிழமை தவிர்த்து மற்ற 6 நாட்களும் காலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை நீச்சல் குளம் இயங்கி வருகிறது. இந்தநிலையில் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று பரவல் அதிகரித்ததை தொடர்ந்து, தொற்று தடுப்பு நடவடிக்கையாக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 16-ந்தேதி முதல் மெரினா மாநகராட்சி நீச்சல் குளம் மூடப்பட்டது.

பயன்பாட்டுக்கு வந்தது

2 ஆண்டுகளாக பயன்பாடின்றி மூடிக்கிடந்த நீச்சல் குளம், தற்போது கொரோனா தொற்று வெகுவாக குறைந்துள்ளதால், மீண்டும் நீச்சல் குளத்தை பொதுமக்கள் பயன்படுத்த மாநகராட்சி அனுமதி வழங்கியது. 2 ஆண்டுகள் செயல்படாததால் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு பணியை நீச்சல் குளங்களில் செயல்படுத்தி, அதன் பிறகு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்க வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி அறிவுறுத்தினார்.

அதன்படி மெரினா மாநகராட்சி நீச்சல் குளத்தில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த பராமரிப்பு பணிகள் தற்போது முடிவுற்று, நீச்சல் குளம் நேற்று (புதன்கிழமை) முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. இதனால் பள்ளி மாணவர்கள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீச்சல் குளம் திறக்கப்பட்ட முதல் நாளான நேற்று, இளைஞர்கள் அதிகளவில் வந்து குவியத்தொடங்கினர்.

இளைஞர்கள் உற்சாகம்

அதற்கான டிக்கெட் கவுண்ட்டரில் நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட்டுகளை பெற்றுகொண்டு, உற்சாகமாக நண்பர்களுடன் குளித்து மகிழ்ந்தனர். இதுகுறித்து நீச்சல் குளத்துக்கு வந்த இளைஞர்கள் கூறுகையில், ‘ஒவ்வொரு ஆண்டும் கோடைக்காலம் நெருங்கும் போது மெரினா நீச்சல் குளம் எங்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்திருக்கும்.

அந்தவகையில் 2 ஆண்டுகளாக மூடப்பட்டு கிடந்த நீச்சல் குளம், தற்போது மீண்டும் திறக்கப்பட்டிருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது,’ என்றனர்.

Next Story