வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு: சமூக நீதி நிலைநாட்டப்படும்- மு.க.ஸ்டாலின் உறுதி
சிறப்பு இட ஒதுக்கீட்டைப் பொறுத்தவரைக்கும், சட்ட வல்லுனர்களுடன் உரிய ஆலோசனை நடத்தி, நிச்சயம் சமூக நீதி நிலைநாட்டப்படும்.
சென்னை,
சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு தொடர்பாக அரசின் கவனத்தை ஈர்த்து ஜி.கே.மணி (பா.ம.க.), செல்வபெருந்தகை (காங்கிரஸ்), வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி) ஆகியோர் பேசினர். செல்வபெருந்தகை (காங்கிரஸ்) பேசும்போது, இட ஒதுக்கீடு தொடர்பாக சில வார்த்தைகளை தெரிவித்தார்.
இதற்கு கடந்த அ.தி.மு.க. உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து செல்வபெருந்தகை தெரிவித்த சில கருத்துக்கள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக சபாநாயகர் மு.அப்பாவு தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனக்கு பேச வாய்ப்பு அளிக்கும்படி சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டார். அவருக்கு சபாநாயகர் அனுமதி வழங்கினார். இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
இட ஒதுக்கீட்டிற்காக பல ஆண்டுகளாக போராடிய வன்னிய மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் அடிப்படையில் 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை சட்டமாக அ.தி.மு.க. அரசு கொண்டு வந்து நிறைவேற்றியது. அதைத் தொடர்ந்து சிலர் கோர்ட்டுக்கு சென்றார்கள்.
மதுரை ஐகோர்ட்டு கிளையில் மூத்த வக்கீல்களை வைத்து வாதாடி இருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் நமக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்திருக்கும். அரசு தரப்பில் சரியான தகவல்கள், ஆவணங்கள் தரப்படவில்லை என்று நீதிபதியே கூறியிருக்கிறார்.
இதை அடிப்படையாக கொண்டு வழக்கு சுப்ரீம் கோர்ட்டு சென்றது. அரசு ஆவணங்களை கோர்ட்டில் முழுமையாக சமர்ப்பித்து இருந்தால் நியாயமான தீர்ப்பு கிடைத்து இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
வன்னியர் சமுதாயத்திற்கு 10.5 சதவீத சிறப்பு ஒதுக்கீடு வழங்கக்கூடிய சட்டம் தொடர்பாக ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் தொடுக்கப்பட்ட வழக்குகளில் தமிழ்நாடு அரசு தீவிரமாக வாதாடியது. அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த சட்டம் என்றாலும், எங்களைப் பொறுத்தவரையில், ஏற்கெனவே மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்திற்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிய அரசு என்ற அந்த நிலையிலே அரசு தலைமை வக்கீல் வாதாடியிருக்கிறார்.
சுப்ரீம் கோர்ட்டில் மூத்த வக்கீல்கள் ராகேஷ் திவேதி, அபிசேக் மனு சிங்வி, முகுல் ரோத்தகி, வில்சன் உள்ளிட்டோர் தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளின் சார்பிலே ஆணித்தரமாக வாதாடியிருக்கிறார்கள். இந்த வழக்கில் எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்வது, தேவையான ஆவணங்களைப் பதிவு செய்வது ஆகிய அனைத்திலும் தமிழ்நாடு அரசு மற்றும் அதன் வக்கீல்கள் செயல்பாடுகள் மிகவும் பாராட்டத்தக்கதாக இருக்கிறது என சுப்ரீம் கோர்ட்டே குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறது.
இந்தச் சிறப்பு ஒதுக்கீட்டிற்கான பரிந்துரை 2012-ல் வழங்கப்பட்டது. ஆனால், இதற்கான சட்டமுன்வடிவு எப்பொழுது வந்தது?. 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு மாலையில் வரப் போகிறது என்று காலையில் செய்தி வருகிறது. அன்று மாலையில், குறிப்பாக தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக, இந்தச் சட்டமுன்வடிவு அவையிலே கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
2012 முதல் 2021 வரை உள்ள இடைவெளிக்குப் பிறகு, காலையில் தேர்தல் அறிவிப்பு; மாலையில் இச்சட்டம் என்று, அதுவும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாகக் கொண்டு வந்து, 2021 பிப்ரவரி 26-ந்தேதி அன்று நிறைவேற்றிய, அந்த அவசரம் தான் ஐகோர்ட்டிலும், சுப்ரீம் கோர்ட்டிலும் வெளிவந்த இந்தத் தீர்ப்பிற்கு முக்கியக் காரணமாக அமைந்திருக்கிறது.
சுப்ரீம் கோர்ட்டு இதுகுறித்த தீர்ப்பில், அரசாங்கம் தவறு செய்திருப்பதை நாங்கள் காண்கிறோம் என்று மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. 26-2-2021 பிப்ரவரி 26-லிருந்தது யாருடைய தலைமையிலான அரசு இருந்தது என்பதைச் சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள மற்ற குறைகளை இந்த மன்றத்தில் நானும் ஒரு முறை சுட்டிக்காட்டி, ஏட்டிக்குப் போட்டி அரசியல் நடத்த நான் தயாராக இல்லை.
இந்தச் சிறப்பு ஒதுக்கீடு சட்டம் தற்காலிகமானது என்று யார் சொன்னது என்ற வாதத்திற்குள் கூட இப்போது நான் செல்ல விரும்பவில்லை. ஏனென்றால், இது மாநிலத்தினுடைய சமூக நீதிப் பிரச்சினை, சிறப்பு இட ஒதுக்கீடு தொடர்பான பிரச்சினை. ஆகவே, இந்த சிறப்பு இட ஒதுக்கீட்டைப் பொறுத்தவரைக்கும், சட்ட வல்லுனர்களுடன் உரிய ஆலோசனை நடத்தி, நிச்சயம் சமூக நீதி நிலைநாட்டப்படும்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத ஒதுக்கீட்டை நாங்கள் கொண்டு வந்தபோது, என்னென்ன தரவுகளையெல்லாம் வைத்து நாங்கள் முறைப்படுத்தினோமோ, நிச்சயமாக அதேபோன்று நாங்கள் இந்த விஷயத்திலும் நிலைநிறுத்துவோம். அதற்கான அதிகாரம் இந்த மாபெரும் மன்றத்திற்கும், மாநில அரசுக்கும் உண்டு என்று தீர்ப்பில் சுப்ரீம் கோர்ட்டு தெளிவாகச் சுட்டிக்காட்டியிருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story