நடிகர் வடிவேலு பாணியில் ....! மளிகை கடையில் அரிசி வாங்குவது போல் ரூ.22 ஆயிரம் அபேஸ்...!


நடிகர் வடிவேலு பாணியில் ....!  மளிகை கடையில் அரிசி வாங்குவது போல் ரூ.22 ஆயிரம் அபேஸ்...!
x
தினத்தந்தி 7 April 2022 12:30 PM GMT (Updated: 2022-04-07T18:00:25+05:30)

நடிகர் வடிவேலு பாணியில் மளிகை கடையில் அரிசி வாங்குவது போல் நடித்து ரூ.22 ஆயிரத்தை வாலிபர் ஒருவர் திருடி சென்ற ருசிகர சம்பவம் நெல்லை அருகே அரங்கேறி உள்ளது.

நெல்லை,

காமெடி நடிகர் வடிவேலு ஒரு சினிமா காட்சி ஒன்றில் அரிசி கடையில் அரிசி வாங்குவது போல் நடித்து அங்கு இருந்த தராசு படி கற்களை திருடி செல்வது போன்று அமைந்திருக்கும். அது போன்ற ருசிகர சம்பவம் நெல்லை அருகே நடந்துள்ளது.

நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கலை கோவில் நகர் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 60). இவர் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று அவரது கடைக்கு வாலிபர் ஒருவர் வந்தார். அப்போது அந்த வாலிபர் கணேசனிடம் எனக்கு அரிசி மூட்டை வேண்டும் என்று கேட்டுள்ளார். உடனே கணேசன் அரிசி மூட்டையை எடுப்பதற்காக கடையின் வேறு ஒரு அறைக்கு சென்றார்.

அப்போது அந்த வாலிபர் கடையின் எடை எந்திரத்தில் இருந்த ரூ.22 ஆயிரத்தை நைசாக திருடி கொண்டு, அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டார். கணேசன் அரிசி மூட்டையை எடுத்து கொண்டு வெளியே வந்தார். ஆனால் அங்கு அந்த வாலிபர் இல்லை. 

மேலும் கடையில் இருந்த ரூ.22 ஆயிரத்தை திருடி சென்று விட்டது தெரிய வந்தது. உடனே கணேசன் இதுகுறித்து சிவந்தி பட்டி போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, பணத்தை திருடி சென்ற வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story