சட்டசபையை முற்றுகையிட்ட 4 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கைது
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாட்டுவண்டியில் வந்து புதுவையில் சட்டசபையை முற்றுகையிட்ட 4 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாட்டுவண்டியில் வந்து புதுவையில் சட்டசபையை முற்றுகையிட்ட 4 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டனர்.
பெட்ரோல் விலை உயர்வு
பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், புதுவை மின்துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்தும் சட்டசபையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டது.
இதன்படி புதுவை தி.மு.க.வினர் அண்ணா சிலை அருகே இன்று காலை கூடினார்கள். அங்கிருந்து மாட்டு வண்டியில் சட்டசபை நோக்கி புறப்பட்டனர். மாநில அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான சிவா எம்.எல்.ஏ. வண்டியை ஓட்ட அதில் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அமர்ந்திருந்தனர். மேலும் சில மாட்டு வண்டிகளில் கட்சி நிர்வாகிகள் வந்தனர்.
கட்சிக் கொடிகளுடன் தொண்டர்கள் சட்டசபை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டு வந்தனர். அண்ணாசாலை, நேருவீதி, மிஷன்வீதி வழியாக மாதா கோவிலை ஊர்வலம் அடைந்தது.
தள்ளுமுள்ளு
அங்கு மாட்டுவண்டியில் இருந்து எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சியினர் இறங்கி சட்டசபை நோக்கி வந்தனர். அவர்களை ஆம்பூர் சாலை அருகே தடுப்புகளை அமைத்து போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.
இதைத்தொடர்ந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டர் மீது ஏறி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக தி.மு.க.வினர் கோஷங்களை எழுப்பினார்கள்.
அதன்பின் சட்டசபையை முற்றுகையிட புறப்பட்டனர். ஆனால் அதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதையொட்டி அந்த பகுதியில் அமைத்திருந்த தடுப்புகளை தள்ளிக்கொண்டு எம்.எல்.ஏ.க்களும், தி.மு.க.வினரும் செல்ல முயன்றனர். இதனால் போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
கைது
இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாநில அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான சிவா எம்.எல்.ஏ., மற்றும் அவைத்தலைவர் எஸ்.பி.சிவக்குமார், எம்.எல்.ஏ.க்கள் அனிபால்கென்னடி, செந்தில்குமார், சம்பத், தி.மு.க. பிரமுகர்கள் ஏ.கே.குமார், செந்தில்குமார், குணா திலீபன், தைரியநாதன், சக்திவேல், ஜே.வி.எஸ்.சரவணன், கோபால், கார்த்திகேயன், கலியகார்த்திகேயன், முகமது யூனூஸ் உள்ளிட்ட தி.மு.க.வினர் பலரை போலீசார் கைது செய்தனர்.
கைதான அனைவரும் கரிக்குடோனில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் சிறிது நேரத்தில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story