ரூ.310 கோடி செலவில் மதுரை, திருநெல்வேலி, செங்கல்பட்டு உள்பட 9 இடங்களில் பாலங்கள்


ரூ.310 கோடி செலவில் மதுரை, திருநெல்வேலி, செங்கல்பட்டு உள்பட 9 இடங்களில் பாலங்கள்
x
தினத்தந்தி 8 April 2022 4:41 AM IST (Updated: 8 April 2022 4:41 AM IST)
t-max-icont-min-icon

நெடுஞ்சாலைத்துறை சார்பில் மதுரை, திருநெல்வேலி, செங்கல்பட்டு உள்பட 9 இடங்களில் ரூ.310 கோடியே 92 லட்சம் செலவில் கட்டப்பட்ட பாலங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

சென்னை,

நெடுஞ்சாலைத்துறை சார்பில் காஞ்சீபுரம், மதுரை, கோவை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ரூ.310 கோடியே 92 லட்சம் செலவில் 6 ரெயில்வே மேம்பாலங்கள், ஒரு ரெயில்வே கீழ்ப்பாலம், ஒரு உயர்மட்ட பாலம் மற்றும் ஒரு பல்வழிச் சாலை மேம்பாலம் ஆகிய 9 பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

இந்த 9 பாலங்களில், காஞ்சீபுரம் மாவட்டம் சென்னை-பொன்னேரிக்கரை-காஞ்சீபுரம் சாலையில் ரூ.59 கோடியே 63 லட்சம் செலவில் ரெயில்வே மேம்பாலம், மதுரை மாவட்டம், மதுரை-தொண்டி சாலை மற்றும் மதுரை சுற்றுச்சாலை சந்திப்பில் ரூ.53 கோடியே 12 லட்சம் செலவில் பல்வழிச்சாலை மேம்பாலம், கோவை மாவட்டம் பொள்ளாச்சி-பாலக்காடு சாலையில் பொள்ளாச்சி கிணத்துக்கடவு ரெயில் நிலையங்களுக்கு இடையே ரூ.48 கோடியே 48 லட்சம் செலவில் ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு இருக்கின்றன.

செங்கல்பட்டு, திருநெல்வேலி...

மேலும், திருவண்ணாமலை மாவட்டம், பாண்டி-கிருஷ்ணகிரி சாலை, தாண்டரை-திருவண்ணாமலை ரெயில் நிலையங்களுக்கு இடையே ரூ.38 கோடியே 74 லட்சம் செலவில் ரெயில்வே மேம்பாலம், திருவண்ணாமலை மாவட்டம், தண்டரை-எரையூர் சாலையில் செய்யாறு ஆற்றின் குறுக்கே ரூ.17 கோடியே 4 லட்சம் செலவில் உயர்மட்ட பாலம், செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் மற்றும் கூடுவாஞ்சேரி ரெயில் நிலையங்களுக்கு இடையே ஊரப்பாக்கம் சாலையில், ரூ.34 கோடியே 50 லட்சம் செலவில் ரெயில்வே மேம்பாலம், விழுப்புரம் மாவட்டம், கடலூர்-சித்தூர் சாலையில், ரூ.22 கோடியே 63 லட்சம் செலவில் ரெயில்வே மேம்பாலமும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், வேலூர் மாவட்டம், காட்பாடி-குடியாத்தம் சாலையிலிருந்து விரிஞ்சிபுரம் செல்லும் சாலையில், லத்தேரி மற்றும் விரிஞ்சிபுரம் ரெயில்வே நிலையங்களுக்கு இடையே ரூ.22 கோடியே 26 லட்சம் செலவில் ரெயில்வே மேம்பாலம், திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி-ஏர்வாடி-வள்ளியூர்-விஜயாபதி சாலையில் ரூ.14 கோடியே 52 லட்சம் செலவில் ரெயில்வே கீழ்ப்பாலம் கட்டப்பட்டுள்ளன.

மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

அந்த வகையில் ரூ.310 கோடியே 92 லட்சம் செலவில் கட்டப்பட்ட 9 பாலங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி நேற்று திறந்து வைத்தார். இதன்மூலம் காத்திருப்பு நேரம் தவிர்க்கப்பட்டு, போக்குவரத்து நெரிசல் மற்றும் பயணநேரம் குறைவதுடன், பொது மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் உரிய நேரத்தில் பாதுகாப்புடன் பயணம் செய்ய இயலும்

இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மை செயலாளர் தீரஜ்குமார், திட்டங்கள் தலைமை பொறியாளர் மா.முருகேசன் உள்பட உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story