அரசு பள்ளிக்கூட மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீடு செல்லும் - ஐகோர்ட்டு தீர்ப்பு


அரசு பள்ளிக்கூட மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீடு செல்லும் - ஐகோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 8 April 2022 6:00 AM IST (Updated: 8 April 2022 6:00 AM IST)
t-max-icont-min-icon

மருத்துவ மாணவர் சேர்க்கையில், அரசு பள்ளிக்கூட மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கியது செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

சென்னை,

மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் சட்டம் இயற்றப்பட்டது.

இந்த சட்டத்தை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் சி.பி.எஸ்.இ., மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர். அதேபோல, அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இந்த இடஒதுக்கீடு தங்களுக்கும் வழங்க வேண்டும் என்று அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களும் வழக்கு தொடர்ந்தனர்.

பாதிப்பு

இந்த வழக்குகளை எல்லாம் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் விசாரித்தனர். அப்போது, ஏற்கனவே தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு முறை அமலில் உள்ளது. மீதமுள்ள 31 சதவீத இட ஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதால், பொதுப்பிரிவில் உள்ள தகுதியான மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், “பொதுப்பிரிவினருக்கான 31 சதவீத இட ஒதுக்கீட்டில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. மொத்த இடங்களில் தான் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அதுவும், நீட் தேர்வு தகுதி அடிப்படையில்தான் இந்த இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது” என்று விளக்கம் அளித்தார்.

நியாயமானது

உயர் கல்வித்துறை சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி. வில்சன், “அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது நியாயமானது. அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என பள்ளிகளை இரு வகையாக பிரிப்பது சட்டப்படி அனுமதிக்கக் கூடியதுதான். அதன் அடிப்படையில் பின் தங்கிய மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்றப்பட்டது” என்று வாதிட்டார். இவர்கள் உட்பட மேலும் பல மூத்த வக்கீல்கள் ஆஜராகி வாதிட்டனர்.

கொள்கை முடிவு

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் பிறப்பித்த தீர்ப்பில்கூறியிருப்பதாவது:-

இந்த விவகாரத்தில், அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமைகளின்படியே மாநில அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. அரசின் கொள்கை முடிவை எதிர்த்து வழக்கு தொடர முடியாது. அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது.

இந்த சட்டம், நீட் தேர்வை நீர்த்துப்போக செய்யவில்லை. நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தான், மருத்துவ படிப்புகளில் இந்த இட ஒதுக்கீடும் வழங்கப்படுகிறது.

சட்டத்தின் நோக்கம்

இந்த சட்டத்தைக் கொண்டு வருவதற்கு முன்பு 6 அரசுப்பள்ளி மாணவர்கள் மட்டுமே மருத்துவ படிப்புகளில் சேர்ந்துள்ளனர். ஆனால், சட்டம் அமலுக்கு வந்தபிறகு, 435 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்புகளில் சேர்ந்துள்ளனர். அதனால், இந்த சட்டத்தின் நோக்கம் நிறைவேறியுள்ளது.

தமிழ்நாடு அரசு, ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி பொன்.கலையரசன் தலைமையில் ஆணையம் அமைத்து சம்பந்தப்பட்ட அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து, அந்த ஆணையம் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையிலேயே இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளது.

தினக்கூலி தொழிலாளர்கள்

இந்த பரிந்துரைகளில், அரசு பள்ளி மாணவர்களின் பெற்றோருக்கு ஆண்டு வருமானம் ரூ.46 ஆயிரத்து 686 ஆக உள்ளது. சி.பி.எஸ்.இ., மாணவர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம் 4 லட்சத்து 68 ஆயிரத்து 413 ஆகவும், ஐ.சி.எஸ்.இ. மாணவர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.4 லட்சத்து 77 ஆயிரத்து 263 ஆகவும் உள்ளது.

அரசுப்பள்ளியில் படிக்கும்83 சதவீத மாணவர்களின்தந்தையர்களும், 65 சதவீத மாணவர்களின் தாயாரும் தினக்கூலி தொழிலாளிகளாக உள்ளனர். எனவே, சமத்துவத்தை தீர்மானிக்கும்போது இந்த அம்சங்களை ஒதுக்கிவிட முடியாது.

இந்தியாவில் அறிவாளிகள்

இடஒதுக்கீடு என்பது விதிவிலக்கல்ல. அது கட்டாயம் என்று சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. எனவே, பள்ளிகள் அடிப்படையில் மாணவர்களை வகைப்படுத்துவது காரணமற்றது என்று கூறி விட முடியாது. இந்தியாவில் மிகப்பெரிய அறிவாளிகள், திறமைசாலிகள் உள்ளனர். சிக்கலான அறுவை சிகிச்சைகளை கூட இங்குள்ள டாக்டர்கள் லாகவமாக மேற்கொள்கின்றனர். இந்தியாவில் மருத்துவ கல்வியும் மிகச்சிறப்பாக உள்ளது.

இதில், சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கிய அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும். இதில், அவர்களுக்கு இருக்கக்கூடிய தடைகளை தாண்டி வர ஏதுவாக இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதனால், இந்த சட்டம் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது அல்ல.

வருமானம் உயர்வு

நீதிபதி பொன்.கலையரசன் ஆணையத்தின் அறிக்கையில், அரசு பள்ளி மாணவர்களின் பெற்றோரைவிட அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் பெற்றோரின் வருமானம், சமூக அந்தஸ்து உயர்வாக உள்ளது. அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் ஆங்கில வழிக்கல்வியிலும் படிக்கின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.

எனவே, இந்த இட ஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்க முடியாது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இந்த இடஒதுக்கீடு அனுமதிக்கத்தக்கது.

சட்டம் செல்லும்

அதேநேரம், இந்த 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை 5 ஆண்டுகளுக்கு பிறகு மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று ஆணையத்தின் பரிந்துரை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதன்படி, 5 ஆண்டுகளுக்கு பின்னர், இந்த இடஒதுக்கீட்டை மறுஆய்வு செய்ய வேண்டும். மேலும், இந்த இடஒதுக்கீட்டைத் தொடர்ந்து வழங்குவதை நிறுத்தும் விதமாக அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் தமிழ்நாடு அரசின் சட்டம் செல்லும்.

இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Next Story