மக்கள் நல பணியாளர்களுக்கு மீண்டும் பணி - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
அதிமுக ஆட்சியில் நீக்கப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை,
மக்கள் நலப்பணியாளர்கள் விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
ஊரகப் பகுதிகளில் படித்த வேலையற்ற இளைஞர்கள் 25,354 பேரை திமுக அரசு 1989-ம் ஆண்டில் மக்கள் நலப்பணியாளர்களாக நியமித்தது.
கடந்த அதிமுக ஆட்சியில் நீக்கப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
விருப்பமுள்ள முன்னாள் மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படும். விருப்பமுள்ள முன்னாள் மக்கள் நலப்பணியாளர்கள் 100 நாள் வேலை திட்ட ஒருங்கிணைப்பாளராக சேரலாம்.
25,354 மக்கள் நலப்பணியாளர்கள் கலைஞர் கருணாநிதியால் நியமனம் செய்யப்பட்டார்கள். ஆனால் அதிமுக ஆட்சியில் மக்கள் நலப்பணியாளர்களை நீக்கி விட்டனர்.
"மாநிலத்தில் உள்ள 12,524 கிராம ஊராட்சிகளில் உள்ள வேலை உறுதித்திட்டப்பணி ஒருங்கிணைப்பாளர் என்ற பணிக்கு விருப்பம் தெரிவிக்க கூடிய முன்னாள் மக்கள் நலப்பணியாளர்களுக்கு முன்னுரிமை அளித்து இந்த பணி வழங்க வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இப்பணிக்கென ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ள மதிப்பு ஊதியம் ரூ.3 ஆயிரத்திலிருந்து ரூ.5000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மக்கள் நலப்பணியாளர்கள் ஏற்கனவே கிராம ஊராட்சி பணிகளில் பணியாற்றியதைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு கிராம ஊராட்சி பணிகளை கூடுதலாக கவனித்து கொள்ள வாய்ப்பளித்து அதற்கென மாநில நிதிக்குழு மானியத்திலிருந்து மாதம் ரூ.2500 வழங்கி ஒட்டுமொத்த மதிப்பு ஊதியமாக ரூ.7500 வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மக்கள் நலப்பணியாளர்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண திமுக அரசு பேச்சுவார்த்தை நடத்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story