சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு கடத்த முயன்ற சிவலிங்க சிலை


சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு கடத்த முயன்ற சிவலிங்க சிலை
x
தினத்தந்தி 8 April 2022 7:10 PM GMT (Updated: 8 April 2022 7:10 PM GMT)

சென்னை விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவிற்கு கடத்த முயன்ற 4 கிலோ எடையுள்ள பழமையான சிவலிங்க சிலை பறிமுதல் செய்யப்பட்டது.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய சரக்கக பிரிவில் இருந்து வெளிநாட்டிற்கு செல்லும் சரக்கு பொருட்களில் பழமையான சிலை கடத்தப்படுவதாக சுங்க இலாகா முதன்மை கமிஷனர் உதய்பாஸ்கருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து முதன்மை கமிஷனர் உதய்பாஸ்கர் தலைமையில் சுங்க இலாகா அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சென்னையில் இருந்து அமெரிக்காவிற்கு அனுப்புவதற்காக கும்பகோணம் முகவரியில் சாமி சிலை அனுப்பும் பார்சல் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பெட்டியை பிரித்து பார்த்த போது, நாகபரணத்துடன் கூடிய சிவலிங்கம் சிலை இருந்தது.

சாமி சிலை பறிமுதல்

இதுதொடர்பாக இந்த சாமி சிலையை அனுப்ப தேவையான தொல்லியல் துறை தடையில்லா சான்று எதுவும் வாங்கவில்லை என்பது உறுதியானது. பித்தளையால் செய்யப்பட்ட அந்த சாமில் சிலையானது 4 கிலோ 560 கிராம் எடையுடன் இருந்தது. இதைத்தொடர்ந்து, அதிகாரிகள் நடத்திய விசாரணையில், கள்ளக்குறிச்சி திருநாவலூர் அருகே உள்ள கெடிலம் கிராமத்தில் ஒருவரிடம் வாங்கியது என தெரியவந்தது. இந்த சிலையை தொல்லியல் துறை அதிகாரிகள் ஆராய்ச்சி செய்த போது, 18-ம் நூற்றாண்டு காலத்து சிலையாக இருக்கலாம் என தெரிவித்தனர். பழமையான சிலையை அமெரிக்காவிற்கு அனுப்ப முயன்றது யார்? இந்த சிலையை கடத்த முயன்றது சர்வதேச கடத்தல் கும்பலா? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து அமெரிக்காவிற்கு அனுப்ப இருந்த சிலையை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story