புதுவை சட்டசபை செயலகத்துக்கு நிதி அதிகாரம் சபாநாயகர் செல்வம் தகவல்


புதுவை சட்டசபை செயலகத்துக்கு நிதி அதிகாரம் சபாநாயகர் செல்வம் தகவல்
x
தினத்தந்தி 9 April 2022 7:22 PM IST (Updated: 9 April 2022 7:22 PM IST)
t-max-icont-min-icon

புதுவை சட்டசபை செயலகத்துக்கு நிதி அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் செல்வம் கூறினார்.

புதுச்சேரி
புதுவை சட்டசபை செயலகத்துக்கு நிதி அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் செல்வம் கூறினார்.
புதுவை சபாநாயகர் செல்வம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சட்டசபை செயலாளர்

புதுவை சட்டசபை செயலாளருக்கு கடந்த 1981-ம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சகம் துறை தலைவருக்கான நிதி அதிகாரங்களை பயன்படுத்துவதற்கான ஆணையை வழங்கி இருந்தது. இதுநாள் வரை புதுவை சட்டசபை செயலகத்தால் அந்த ஆணை நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இது எனது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. இதுகுறித்து எனது தலைமையில் கடந்த பிப்ரவரி மாதம் தலைமை செயலாளர், நிதித்துறை செயலாளர், சட்டத்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஒரு கூட்டம் நடந்தது. அதன் தொடர்ச்சியாக கோப்பு தயாரிக்கப்பட்டு நிதித்துறைக்கு அனுப்பப்பட்டது. கோப்பு தொடர்பாக தலைமை செயலாளர் மற்றும் நிதித்துறை செயலாளருடன் கடந்த 7-ந்தேதி கலந்து பேசினேன்.

நிதி அதிகாரம்

அதன் தொடர்ச்சியாக மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கிய ஆணைப்படி புதுவை சட்டசபை செயலாளர், துறைத்தலைவரின் நிதி அதிகாரங்களை பயன்படுத்தலாம் என்று முடிவு எடுக்கப்பட்டு அந்த ஆணை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இதற்கான புதிய அரசாணை விரைவில் வெளியிடப்படும்.
இந்த நடைமுறையின் காரணமாக நிதி தொடர்பான கோப்புகள் தலைமை செயலகம் மற்றும் நிதித்துறை செயலகத்துக்கு அனுப்பப்படாமல் சட்டசபை செயலகத்திலேயே விரைந்து செயல்படுத்த ஏதுவாக இருக்கும். இதனால் காலவிரயம் ஆவது தவிர்க்கப்படும். இந்த புதிய நடைமுறையில் நிதித்துறை தொடர்பான ஆணைகள் மற்றும் விதிகள் அனைத்தும் தவறாமல் பின்பற்றப்படும். எனவே சட்டசபை செயலகத்துக்கு நிதி சுயாட்சி மற்றும் நிர்வாக சுயாட்சி பெறுவதற்கான முதல் படியாக இதனை கருதலாம்.

சபாநாயகர்கள் மாநாடு

அசாம் மாநிலம் கவுகாத்தியில் காமன்வெல்த் சபாநாயகர்கள் மாநாடு 11, 12 ந்தேதி  நடக்கிறது. இந்த மாநாட்டில் நானும், துணை சபாநாயகரும் கலந்துகொள்கிறோம். வருகிற 24-ந்தேதி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா புதுவை வரும்போது, புதிய சட்டசபை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவதற்கு வாய்ப்பு உள்ளதா? என்பது தொடர்பாக ஆராயப்படும்.
இவ்வாறு சபாநாயகர் செல்வம் கூறினார்.

Next Story