புதுவை நகரப்பகுதியில் போலி பத்திரம் தயாரித்து வீடு நிலம் அபகரிப்பு நாராயணசாமி திடுக்கிடும் தகவல்
புதுவையில் போலி பத்திரம் தயாரித்து வீடு, நிலம் அபகரிக்கப்படுவதாக நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி
புதுவையில் போலி பத்திரம் தயாரித்து வீடு, நிலம் அபகரிக்கப்படுவதாக நாராயணசாமி கூறினார்.
புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்தி திணிப்பு
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இந்தி மொழி தான் முதன்மை மொழி என்று நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் கூறியுள்ளார். ஆங்கிலத்துக்கு பதிலாக இந்தி தான் இந்தியா முழுவதும் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். நாட்டில் பல மதம், மொழிகள் உள்ளது. உள்துறை மந்திரி அமித்ஷா சொன்ன கருத்து பல்வேறு மாநிலங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தென் மாநிலங்களில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று பேசப்படுகிறது. இந்தியை எதிர்த்து நாம் போராடி வருகிறோம். தமிழ்தான் நமக்கு முதன்மையான மொழி. அதற்கு அடுத்தபடியாக இணைப்பு மொழியாக ஆங்கிலம் உள்ளது.
நமது கொள்கை இருமொழி கொள்கைதான். இந்தி திணிப்பை மக்கள் ஏற்க மாட்டார்கள். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதற்கு புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமியின் கருத்து என்ன?
10 சதவீத இடஒதுக்கீடு
தமிழகத்தில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கியது செல்லும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. புதுவையில் காங்கிரஸ்-தி.மு.க. ஆட்சி நடந்தபோது 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க அமைச்சரவையில் முடிவெடுத்து அனுப்பியபோது அதனை மத்திய உள்துறை அமைச்சகம் நிராகரித்துவிட்டது. மத்திய அரசு புதுவை மக்களுக்கு விரோதமாக செயல்பட்டது.
தற்போது புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி அரசு தான் உள்ளது. இப்போதாவது அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி ஒப்புதல் பெற வேண்டும். இதை செய்யாவிட்டால் அடிமை ஆட்சி நடத்துகிறார்கள் என்ற நிலைதான் ஏற்படும்.
பா.ஜ.க.விடம் சரண்
தற்போது நீட் தேர்வை தொடர்ந்து கியூட் தேர்வை கொண்டு வந்துள்ளனர். தமிழகத்தில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த தேர்வை எழுதாமல் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படிக்க முடியாது. ஏற்கனவே ஏழைகள் மருத்துவக்கல்வி படிக்கக் கூடாது என்பதற்காக நீட் தேர்வை கொண்டுவந்தனர். தற்போது கல்லூரி படிப்பை படிக்கக் கூடாது என்பதற்காக கியூட் தேர்வை கொண்டு வந்துள்ளனர். இதற்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி என்ன பதில் சொல்கிறார்?
நமது பிள்ளைகள் தடையின்றி படிக்க ஏன் கடிதம் எழுதவில்லை? அவர் பா.ஜ.க.விடம் சரணடைந்து விட்டாரா? முதல்-அமைச்சர் முதுகெலும்போடு இருக்கவேண்டும். நாற்காலிக்கு ஆசைப்பட்டு பா.ஜ.க.விடம் அடிமையாக இருக்கக்கூடாது. மின் கட்டண உயர்வுக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றன. தனியாரிடம் ஒப்படைத்தால் இன்னும் கட்டணம் அதிகரிக்கும். அரசு உடனடியாக மின் கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும். தனியார் மய முடிவை கைவிட வேண்டும்.
வீடு, நிலம் அபகரிப்பு
புதுவையில் மீண்டும் வீடு, நில அபகரிப்பு, குழந்தை கடத்தல், கொலைகள் அதிகரித்து வருகின்றன. பிரான்சு நாட்டில் வசிப்பவர்களின் சொத்துகள் போலி பத்திரங்கள் தயாரிக்கப்பட்டு அபகரிக்கப்படுகின்றன. சமீபத்தில் நகரப்பகுதியில் எல்லையம்மன்கோவில் தெருவில் ஒரு சொத்து அபகரிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் முக்கிய பிரமுகர்களின் ஆசியோடு நடந்துள்ளது. இந்தநிலையில் சார்பதிவாளர் உலகநாதன் மர்மான முறையில் இறந்துள்ளார். இதுதொடர்பான விசாரணைக்கு முதல்-அமைச்சர் அலுவலகம் தடைபோட்டு உள்ளதாக கூறப்படுகிறது. போலி பத்திரம் தயாரித்து நிலம் விற்பனை செய்தது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வாறு நாராயணசாமி கூறினார்.
=======
Related Tags :
Next Story