தொழில்நுட்பத்தின் மூலம் கிடைத்த செல்போனுக்கு பலரும் அடிமையாகி கிடக்கிறார்கள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வேதனை


தொழில்நுட்பத்தின் மூலம் கிடைத்த  செல்போனுக்கு   பலரும்  அடிமையாகி கிடக்கிறார்கள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வேதனை
x
தினத்தந்தி 9 April 2022 8:00 PM IST (Updated: 9 April 2022 8:00 PM IST)
t-max-icont-min-icon

தொழில்நுட்பத்தின் மூலம் கிடைத்த செல்போனுக்கு பலரும் அடிமையாகி கிடக்கிறார்கள் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

புதுச்சேரி
தொழில்நுட்பத்தின் மூலம் கிடைத்த செல்போனுக்கு   பலரும்  அடிமையாகி கிடக்கிறார்கள் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

மாவட்ட மாநாடு

சர்வதேச ரோட்டரி சங்கத்தின் புதுச்சேரி மாவட்ட கிளை சார்பில் ‘சுந்தரகாண்டம்’ என்ற பெயரில் மாவட்ட அளவிலான மாநாடு மரப்பாலத்தில் உள்ள சுகன்யா கன்வென்சன் சென்டரில் தொடங்கியது. மாநாட்டை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்து முன்னாள் மாவட்ட ஆளுநர் சண்முகசுந்தரத்துக்கு சிறந்த சேவைக்கான விருதை வழங்கினார்.

மாநாட்டில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-

நாட்டில் போலியோ ஒழிக்கப்பட்டுள்ளது. இதில் ரோட்டரி சங்கத்தின் பங்களிப்பு முக்கியமானது. தற்போது கொரோனா இல்லாத மாநிலமாக புதுச்சேரி உருவாகி இருக்கிறது. அதற்காக மக்களுக்கும், அதற்கு துணையாக இருந்த ரோட்டரி சங்கம் உள்ளிட்ட தொண்டு நிறுவனங்களுக்கும் நன்றி.
ஒரு வீட்டில் பசு இருந்தால் அந்த குடும்பத்தினரின் பசியை போக்குவதோடு பொருளாதார வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும். அதனால் ரோட்டரி சங்கம் கோதானம் செய்துள்ளது. 

பிரதமருக்கு நன்றி

மக்கள் அனைவரும் தங்களது உடல்நலத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதற்காக பாடுபடும் ரோட்டரி சங்கத்துக்கு எனது பாராட்டுகள். நாட்டில் மாற்றுத்திறனாளிகள் பலருக்கு செயற்கை உடல் உறுப்புகளையும், கொரோனா காலத்தில் ரூ.25 லட்சம் மதிப்பில் ஆக்சிஜன் கொள்கலன்களையும் அவர்கள் வழங்கியுள்ளனர்.
கொரோனா 2-வது அலை கடுமையாக இருந்தபோது ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் மத்திய அரசு எச்சரிக்கையுடன் திட்டமிட்டு செயல்பட்டது. அதற்காக பிரதமர் மோடிக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 
இவ்வளவு பெரிய கூட்டம் நடக்கும் இடத்தில் நாம் முக கவசம் அணியாமல் உள்ளோம். அதற்கான துணிச்சலை நமக்கு தடுப்பூசிகள் அளித்துள்ளன. முன்பு வெளிநாடுகளில் இருந்துதான் தடுப்பூசிகள் பெறப்பட்டன. ஆனால் தற்போது நாம் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை பயன்படுத்தி கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ளோம்.

செல்போனுக்கு அடிமை

தொழில் முனைவோர்களில் பலர் பிரதமரின் மேக் இன் இந்தியா, ஆத்மா நிர்பர் பாரத் ஆகியவற்றோடு பயணித்துக் கொண்டுள்ளனர். இயற்கையையும், பசுமையையும் பாதுகாக்க வேண்டும் என்ற சிந்தனையை பாராட்டுகிறேன். தொழில்நுட்பத்தின் மூலம் கிடைத்த செல்போனுக்கு பலரும் அடிமைப்பட்டு கிடக்கிறார்கள். அதில் இருந்து விடுபட்டு இயற்கையை ரசிக்க பழகிக்கொள்ள வேண்டும். நாம் எப்போதும் இயற்கையோடு இணைந்து பயணிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story