கொடைக்கானலில் இரண்டாவது நாளாக கனமழை - பலத்த இடி சத்தத்தால் குலுங்கிய நகரம்
கொடைக்கானல் பகுதியில் இரண்டாவது நாளாக கனமழை பெய்ததால் சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
கொடைக்கானல்,
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனிடையே இன்று பிற்பகல் முதல் மாலை வரை விட்டு விட்டு சாரல் மழை பெய்த நிலையில் மாலை ஐந்து முப்பது மணி முதல் பலத்த இடி மின்னலுடன் கூடிய கனமழை நகரின் பல்வேறு பகுதிகளில் பெய்தது.
அதிக மின்னல் மற்றும் இடி சப்தத்தால் நகரமே குலுங்கியது. அத்துடன் மேகமூட்டம் தரையிறங்கியதன் காரணமாக வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்தனர். வார விடுமுறை தினங்களை முன்னிட்டு சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரித்த நிலையில் மழை காரணமாக அவர்கள் சுற்றுலா இடங்களை காண முடியாமல் சிரமம் அடைந்தனர்.
மழையினை தொடர்ந்து பலத்த காற்று வீசியதால் பகல் நேரத்திலேயே கடும் குளிர் நிலவியது. பலத்த மழை காரணமாக நகரின் அருகில் உள்ள வெள்ளி நீர்வீழ்ச்சி, பியர் சோலா அருவி, பாம்பார் அருவி, தேவதை அருவி போன்றவற்றில் அதிக வெள்ளம் கொட்டியது. நகருக்கு வருகை தந்த பயணிகளில் சிலர் மழையில் நனைந்தபடியே பிரையன்ட் பூங்காவை கண்டுகளித்ததுடன் படகு சவாரியும் மேற்கொண்டனர்.
இதனிடையே இன்று பிற்பகல் நேரத்தில் பைன் மரக்காடுகள் பகுதியில் குவிந்திருந்த சுற்றுலாப்பயணிகள் மத்தியில் பெரிய காட்டெருமை மிரண்டு ஓடி வந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓடினர். இதில் கீழே விழுந்ததில் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. எனவே தொடர்ந்து அப்பகுதியில் உலாவரும் காட்டெருமை நடமாட்டத்தை தடுக்க கூடுதல் வனக் காவலர்களை நியமிக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகளும் வியாபாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story