எதிர்காலத்தில் அச்சு ஊடகமும், டிஜிட்டல் தொழில்நுட்பமும் இணைந்தே செயல்படும்- தினத்தந்தி குழும இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன்


எதிர்காலத்தில் அச்சு ஊடகமும், டிஜிட்டல் தொழில்நுட்பமும் இணைந்தே செயல்படும்- தினத்தந்தி குழும இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன்
x
தினத்தந்தி 9 April 2022 7:55 PM GMT (Updated: 9 April 2022 7:55 PM GMT)

எதிர்காலத்தில் அச்சு ஊடகமும், டிஜிட்டல் தொழில்நுட்பமும் இணைந்தே செயல்படும் என்று ‘தினத்தந்தி’ குழும இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன் கூறினார்.

குழு விவாதம்

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் இந்திய தொழில் கூட்டமைப்பின் தென்மண்டலம் சார்பில் நேற்று குழு விவாதம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. நவீன ஊடகங்களின் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையில் 21-ம் நூற்றாண்டில் அச்சு ஊடகங்களை எப்படி மீண்டும் புதுப்பிப்பது? என்பது குறித்த குழு விவாதம் நேற்று மாலை நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியை மூத்த செய்தியாளர் லதா சீனிவாசன் ஒருங்கிணைத்தார். கொரோனா காலத்தில் அச்சு ஊடகங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள்; அதிலிருந்து மீண்டெழுந்து மீண்டும் தலைநிமிர்ந்த சூழ்நிலை; சமூக வலைதளங்களின் பெருக்கம் அதிகரித்து வரும் நிலையில் அச்சு ஊடகங்கள் தாக்குபிடிப்பதில் தற்போதைய நிலை; இனி வரும் காலங்களில் தாக்குபிடிக்க முடியுமா? என்ற கேள்வி; செய்தித்தாள் காகிதத்தின் விலை ஏற்றம்; அச்சு ஊடகங்களின் எதிர்காலம் ஆகியவற்றை விவாதக்குழுவினரின் முன்வைத்தார். மேலும் நிகழ்ச்சியின்போது அதில் பங்கேற்ற பலரும் கேள்விகளை கேட்டனர்.

அத்தியாவசிய தேவை

இந்த கேள்விகளுக்கு ‘தினத்தந்தி’ குழும இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன், விகடன் குழும மேலாண்மை இயக்குனர் பி.சீனிவாசன், தினமலர் இயக்குனர் (செயலாக்கம்) லட்சுமிபதி ஆதிமூலம் ஆகியோர் விரிவாக பதில் அளித்தனர். அப்போது ‘தினத்தந்தி’ குழும இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன் பேசியதாவது:-

நாங்கள் செய்தி நிறுவனங்களை நடத்தினாலும் எங்களை செய்தியாளர்களாகத்தான் பார்த்துகொள்கிறோம். எந்த ஊடகத்தின் மூலமாக என்றாலும், செய்திகள் வெளியிடப்படுகின்றன. உலக அளவில் பார்க்கும்போது, செய்தித்தாள்களை படிப்பதில் இருந்து மக்கள் வெளியேறுவதாக கூறப்பட்டாலும் செய்திகளை படிப்பதில் இருந்து யாரும் வெளியேறிவிட்டதான நிலை ஏற்படவில்லை.

அதன்படி பார்க்கும்போது, செய்தி என்பது எப்போதுமே அத்தியாவசியமாக தேவைப்படும் ஒன்றாகவே நீடிக்கும். எனவே செய்திகளை எந்த ஊடகம் மூலமாக வெளியிடுகிறோம் என்பது முக்கியம் அல்ல. என்றாலும், செய்திகள் வெளியிடப்பட்டு கொண்டேதான் இருக்கும். நமது நாட்டில் ஆங்கிலத்தைவிட பிராந்திய மொழியைத்தான் அதிக மக்கள் பேசுகின்றனர். எனவே அதிக மக்கள் பிராந்திய மொழி செய்தித்தாள்களையே படிக்கிறார்கள்.

அச்சு ஊடகமும் நீடிக்கும்

செய்திகளை சமூக வலைதளங்களில் வெளியிடுவதில் வித்தியாசம் உள்ளது. வெளியிடும் கருத்து ஒன்றுதான் என்றாலும் அதை வெளியிடும் விதங்களில் சமூக வலைதளமும், செய்தித்தாள்களும் வித்தியாசம் காட்டுகின்றன. ஆனால் செய்தியை சேகரிப்பதற்கான ஆதாரங்கள் முக்கியமாக உள்ளன. சமூக வலைதளத்தில் வெளியிடப்படும் செய்திகள், இளைஞர்களை கவர்வதாக இருக்க வேண்டும். பாரம்பரிய செய்தி நிறுவன ‘எடிட்டோரியல்’ என்ற செய்திக்குழு இருந்தாலும்கூட, சமூக வலைதளத்திற்கான செய்திக்கென்று தனி செய்திக்குழுக்களை வைத்திருக்கிறோம்.

செய்தித்தாள் மீது வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையும் மதிப்பும் இங்கு அதிகம். உதாரணமாக, மார்வெல் என்ற நிறுவனம் காமிக்ஸ் தொடர்களை கொடுத்து வந்தது. அந்த அங்கீகாரத்தையும், மதிப்பையும் பயன்படுத்திக்கொண்டு இன்னும் தொடர்கின்றனர். அச்சு ஊடகங்களும் அதைப்போலவே தொடர்ந்து நீடிக்கும்.

‘வெப்-3’ தொழில்நுட்பம்

அச்சு ஊடகங்களை நடத்துவதில் முன்பைவிட தற்போது பல வித்தியாசங்கள் தென்படுகின்றன. செய்தித்தாள் காகிதத்தின் விலை ஏற்றம் கண்டுள்ளது. விளம்பரங்கள் குறைவாக உள்ளன என்பது உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன. ஆனாலும் அவற்றை நிர்வகித்து ஆக வேண்டும். சாத்தியமாக இருக்கும்வரை தற்போதுள்ள விலையின்படி விற்பனையை தொடர முடியும். சாத்தியமற்ற தன்மை வரும்போதுதான் வேறு வழியில்லாமல் பத்திரிகையின் விலையை உயர்த்த வேண்டியதாகி விடுகிறது.

‘வெப்-3’ என்பது எதிர்காலத்தில் வரும் தொழில்நுட்பமாக உள்ளது அந்த தொழில்நுட்பம் வரும்போது நம் நாடு அதில் பின்தங்கி இருக்காது என்று நம்புகிறேன். நம் நாடு வளர்ச்சி பெறுவதற்கு அது ஒரு நல்ல வாய்ப்பாகவும் உள்ளது. அதை கையாளும் திறனும் நிச்சயமாக உள்ளது.

மாறிய ‘பிரேக்கிங் நியூஸ்’

செய்தித்தாள்கள் என்பவை முன்பு ‘‘பிரேக்கிங் நியூஸ்” என்ற வகையில் செய்திகளை முதலில் வெளிக்கொணர்வதாக இருந்தன. 1990-ம் ஆண்டுகளுக்கு பிறகு அது தொலைக்காட்சிகளுக்கு மாறியது. சமூக வலைதளங்கள் வந்த பிறகு மீண்டும் அங்கிருந்து இங்கு மாற்றம் நிகழ்ந்துள்ளது. எனக்கு அதிகபட்ச தகவல்கள் வலைதளம் மூலமாகவே கிடைக்கின்றன.

வாசிக்கும் பழக்கம் இன்னும் செத்துவிடவில்லை. வாசிக்கும் ஊடகம்தான் மாறி வருகிறது. இன்னும் 5 ஆண்டுகளில் மெய்நிகர் தொழில்நுட்பம், ‘மெட்டா வெர்சஸ்’ போன்ற தொழில்நுட்பங்களில் மக்கள் இருப்பார்கள். ‘மெட்டா வெர்சசிலும்’ நாங்கள் செய்திகளை கொடுத்தாக வேண்டும். அதை கண்டிப்பாக செய்வோம். விரைவில் நிகழும் எதிர்காலத்தில் ‘மெட்டா வெர்சஸ்’ தேவை அவசியமானதாக இருக்கும். எனவே அதற்கானவற்றை கொள்முதல் செய்ய வேண்டியதிருக்கும்.

உலக நிலைப்பாடுதான் பலவற்றை முடிவு செய்கின்றன. டிவி விளம்பரங்களை டிஜிட்டல் விளம்பரங்கள் மாற்றக்கூடும். டிஜிட்டல் தொழில்நுட்பம் அடுத்த ஆண்டுகளில் எல்லாவற்றையும் தாண்டி வரும். அதுதான் எதிர்காலமாகவும் இருக்கும். டிஜிட்டல் திரைகளை அதிகம் பயன்படுத்துவது இளைஞர்களுக்கு நல்லதல்ல. ஆனால் அதை விரும்பினாலும், விரும்பா விட்டாலும் அதை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறோம்.

இணைந்து நீடிக்கும்

பேப்பருக்காக பல மரங்கள் வெட்டப்படுகின்றன. ஆனாலும் அடுத்த தொழில்நுட்பங்கள் என்னவாக இருக்கும் என்பது யாருக்கு தெரியும். டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் பின்விளைவுகள் உள்ளன என்றாலும், சாதகமான அம்சங்களும் உள்ளன. எதிர்காலத்தில் அச்சு ஊடகமும், டிஜிட்டல் தொழில்நுட்பமும் இணைந்தே செயல்படும். அச்சு ஊடகம் சாகாது. அது எப்போதுமே நீடிக்கும். ஆன்லைன் வாசகர்களை அச்சு ஊடகங்களுக்கு இழுக்கும் தொழில்நுட்பம் மற்றும் அச்சு ஊடகத்தில் இருந்து ‘கியூஆர் கோடு’ மூலம் ஆன்லைன் போகும் தொழில்நுட்பம் போன்றவை தேவைப்படலாம். இதுதான் எதிர்காலம். இதுபோன்ற தொழில்நுட்பங்களைத்தான் எதிர்பார்க்கிறோம். விரைவில் அதை பெறுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story