வாலிபர் மர்ம சாவில் திடீர் திருப்பம்: தங்கையிடம் ஆபாசமாக பேசியதால் தீர்த்து கட்டியதாக 2 பேர் கைது


வாலிபர் மர்ம சாவில் திடீர் திருப்பம்: தங்கையிடம் ஆபாசமாக பேசியதால் தீர்த்து கட்டியதாக 2 பேர் கைது
x
தினத்தந்தி 10 April 2022 3:40 PM IST (Updated: 10 April 2022 3:40 PM IST)
t-max-icont-min-icon

பர்கூர் அருகே ஏரியில் மர்மமான முறையில் வாலிபர் இறந்து கிடந்த வழக்கில் அவரை கழுத்தை நெரித்துக்கொலை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். தங்கையிடம் ஆபாசமாக பேசியதால் தீர்த்து கட்டியதாக அவர்கள் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர்.

பர்கூர்,

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 25). சொந்தமாக சரக்கு வாகனம் வைத்து ஓட்டி வந்துள்ளார். தொழிலில் நஷ்டம் அடைந்ததால் 1½ மாதத்திற்கு முன் பர்கூரை அடுத்த பட்லப்பள்ளியில் தனது அக்காள் வீட்டில் தங்கி பெயிண்டர் வேலைக்கு சென்று வந்தார்.

இந்தநிலையில் பர்கூர் அடுத்த தீர்த்தகிரிப்பட்டி ஏரியில் கடந்த 6-ந் தேதி ராஜசேகர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது பிணத்தை கைப்பற்றிய போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர். விசாரணையில், ராஜசேகர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து செல்போன் டவர் சிக்னலை வைத்து அந்த நேரத்தில் ஏரிக்கு வந்தவர்களின் மொபைல் எண்களையும் போலீசார் எடுத்து விசாரித்தனர்.

இந்தநிலையில், காளிநாயனப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் தமிழரசனிடம், ராஜசேகரை முன்விரோதத்தில் கொன்றதாக பர்கூர் ஒன்றியம் காரகுப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட கொல்லப்பள்ளியை சேர்ந்த திருப்பதி (30), அதே பகுதியை சேர்ந்த திருப்பதியின் சித்தப்பா மகன் முருகன் (35) ஆகிய 2 பேரும் சரண் அடைந்தனர். அவர்கள் 2 பேரும் பர்கூர் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். சரண் அடைந்த 2 பேரும் போலீசில் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

நாங்களும், ராஜசேகரும் உறவினர்கள். எங்களது தங்கையை ராஜசேகரின் சொந்த ஊரான கந்திலியில் திருமணம் செய்து கொடுத்தோம். அவர் ராஜசேகரின் வீட்டின் அருகே குடியிருந்து வருகிறார். இதனால் அவரிடம் ராஜசேகர் ஆபாசமாக பேசி கிண்டல் செய்வதாக தங்கை எங்களிடம் கூறி அழுதார். 

இதனால் எங்களுக்கு அவர் மீது ஆத்திரம் ஏற்பட்டது.

இந்தநிலையில் கடந்த 1½ மாதத்திற்கு முன்பு கந்திலியிலிருந்து பட்லப்பள்ளி வந்த ராஜசேகரை நோட்டமிட்டோம். கடந்த 5-ந் தேதி இரவு அவரை தீர்த்தகிரிப்பட்டி ஏரிக்கு அழைத்து சென்று மது வாங்கி கொடுத்தோம்.

நள்ளிரவு நேரத்தில் கழுத்தை நெரித்துக்கொலை செய்து விட்டு, நாங்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பிவிட்டோம். போலீசார் விசாரணையில் எங்களை நெருங்குவதை உணர்ந்து நாங்களே சரணடைந்து விட்டோம். 

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதையடுத்து திருப்பதி, முருகன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். பர்கூர் அருகே ஏரியில் வாலிபர் பிணமாக கிடந்த வழக்கில் தங்கையிடம் ஆபாசமாக பேசியதால் அவரை கழுத்தை நெரித்துக்கொலை செய்த 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
1 More update

Next Story