சுற்றுலா பயணிகள் வந்த பஸ் கவிழ்ந்ததில் 7 வயது சிறுமி பலி


சுற்றுலா பயணிகள் வந்த பஸ் கவிழ்ந்ததில் 7 வயது சிறுமி பலி
x
தினத்தந்தி 10 April 2022 7:50 PM IST (Updated: 10 April 2022 7:50 PM IST)
t-max-icont-min-icon

ஆந்திராவில் இருந்து சுற்றுலா வந்த போது கட்டுப்பாட்டை இழந்த பஸ் கவிழ்ந்து விபத்துகுள்ளானதில் சிறுமி பலியானார். 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

வேளாங்கண்ணி:

ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த நரசிம்மா மற்றும் சுற்று வட்டாரபகுதியை சேர்ந்த 44 பேர் குடும்பத்துடன் ஆம்னி பஸ்ஸில் கடந்த 8-ந்தேதி சுற்றுலா செல்ல கடப்பாவிலிருந்து புறப்பட்டனர். பஸ்ஸை கடப்பா பகுதியை சேர்ந்த மல்லைய்யா மகன் நிரஞ்சன் (வயது 39) என்பவர் ஒட்டினார்.

அவர்கள் நேற்று நாகூர் ஆண்டவர் தர்காவில் வழிபாடு செய்தனர். பின்னர் அங்கிருந்து இரவு வேளாங்கண்ணி வந்து தங்கியுள்ளனர். இன்று வேளாங்கண்ணியில் நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்ற பின்னர் மதியம் அங்கிருந்து ராமநாதபுரம் சென்றனர். 

அப்போது திருப்பூண்டி அருகே காரைநகர் வந்தபோது திடீரென ஒட்டுநரின் கட்டுபாட்டை இழந்து அருகில் உள்ள சம்பத்குமார் மற்றும் அவரது தம்பி சதீஸ்குமார் ஆகியோரது வீட்டின் முன்பகுதியில் மோதி தலைகீழாக கவிழ்ந்தது.

பஸ்ஸில் வந்த அனைவரும் கூச்சலிட்டதையடுத்து அருகில் இருந்தவர்கள் பேருந்தில் இருந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் பேருந்தில் இடிபாடுகளில் சிக்கி நரசிம்மன் மகள் சாத்விகா (வயது 7) என்ற சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

விபத்து குறித்து கீழையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story