சென்னையில் பயங்கரம்: தனியார் கம்பெனி ஊழியரை தாக்கி 82 லட்சம் கொள்ளை..!
சென்னையில் தனியார் கம்பெனி ஊழியரை கத்தியால் தாக்கி 82 லட்சம் கொள்ளையடித்த கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சென்னை:
சென்னை புழல்-தாம்பரம் பைபாஸ் சாலை, அம்பத்தூர் தொழிற்பேட்டை மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவரை மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக கத்தியால் தாக்கி அவரிடம் இருந்த 82 லட்சம் ரூபாயை பறித்து சென்றனர்.
இது குறித்து அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். அதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்பத்தூர் உதவி கமிஷனர் கனகராஜ், இன்ஸ்பெக்டர்கள் ராமசாமி மற்றும் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
முதல்கட்ட விசாரணையில் மாதவரம் பால்பண்ணை அருகே இருக்கும் தனியார் கம்பெனியில் வேலை செய்யும் ஊழியர் விஜயகுமார் கொண்டு சென்ற கம்பெனி பணம் 82 லட்சத்தை மர்ம நபர்கள் பின் தொடர்ந்து வந்து பறித்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த அம்பத்தூர் எஸ்டேட் போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை பதிவுகளை வைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் போக்குவரத்து மிகுந்த பைபாஸ் சாலையில் வாலிபர் ஒருவரை தாக்கி 82 லட்சம் ரூபாயை கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story