காப்பீடு திட்டம்: அலட்சியம் காட்டும் தனியார் மருத்துவமனைகளுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை
அலட்சியம் காட்டும் தனியார் மருத்துவமனைகள் காப்பீடு திட்டத்தில் இருந்து விலக்கிவைக்கப்படும் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கான மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாமை மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதனையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 1,414 பத்திரிகையாளர்களுக்கான மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கும் சிறப்பு முகாம் தொடங்கப்பட்டுள்ளது. 10,703 கோடி ரூபாய் செலவில் இதுவரை 1.9 கோடி நபர்கள் மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் பயன் பெற்றுள்ளனர்.
கொரோனாவில் இருந்து இன்னும் முழுமையாக நாம் விடுபடவில்லை என தொடர்ச்சியாக கூறி வருகிறோம். சீனா, மேற்காசிய நாடுகள், ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. அரசு மருத்துவமனைகளில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக மத்திய அரசு வழிகாட்டுதல்களை வெளியிட்ட பிறகு மிக விரைவில் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படும்.
மருத்துவ காப்பீடு திட்டத்தில் அலட்சியம் காட்டும் தனியார் மருத்துவமனைகள் காப்பீடு திட்டத்தில் இருந்கு விலக்கி வைக்கப்படும். அவர்களுக்கு எதிராக சட்டரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் மருத்துவமனையில் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அலட்சியப்படுத்தினால், 104 எண்ணிற்கு புகார் அளிக்கலாம். தற்போது 1,700 மருத்துவமனைகளில் காப்பீட்டுத் திட்டம் செயல்பட்டு வருகிறது” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
Related Tags :
Next Story