டேங்கர் லாரி மோதிய விபத்தில் பெண் போலீஸ் ஏட்டு பலி..!


டேங்கர் லாரி மோதிய விபத்தில் பெண் போலீஸ் ஏட்டு பலி..!
x
தினத்தந்தி 11 April 2022 3:53 PM IST (Updated: 11 April 2022 3:53 PM IST)
t-max-icont-min-icon

மார்த்தாண்டத்தில் நடந்த விபத்தில் கருங்கல் போலீஸ் நிலைய ஏட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

குழித்துறை, 

களியக்காவிளை அருகே உள்ள கிராத்தூரை சேர்ந்தவர் கிறிஸ்டல் பாய் (45). இவர் பெருங்கல் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் லைசன் (50) ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஆவார். இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை பணியை முடித்துவிட்டு மார்த்தாண்டம் வந்து வெட்டுமணியில் உள்ள குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு ஏதோ ஒரு சான்றிதழ் வாங்குவதற்காக சென்றிருந்தார்.

அங்கு பணியை முடித்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் 10½ மணி அளவில் மீண்டும் ஆர்ப்பாட்டத்திற்கு புறப்பட்டுச் சென்றார். அப்போது மார்த்தாண்டம் அருகே சென்று கொண்டிருக்கும் போது மேம்பாலத்தின் கீழே கிறிஸ்டல்பாய்க்கு பின்னால் தண்ணீருடன் சென்றுகொண்டிருந்த ஒரு டேங்கர் லாரி அவரது இரு சக்கர வாகனத்தில் மோதியது. அதனால் தூக்கி வீசப்பட்ட கிறிஸ்டல் பாய் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மார்த்தாண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடம் விரைந்தனர். அங்கு உயிரிழந்த கிறிஸ்டல் பாயின் உடலை மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்தார்கள். மேலும் சம்பவ இடத்திற்கு தக்கலை போலீஸ் துணை கண்காணிப்பாளர் கணேசன் சென்று விசாரணை நடத்தினார். மேலும் அந்த டேங்கர் லாரியை பறிமுதல் செய்த போலீசார் அதை ஓட்டிச் சென்ற டிரைவர் அடைக்காகுழியயை சேர்ந்த பாபு (49) என்பவரை கைது செய்தனர்.

கருங்கல் பெண் போலீஸ் ஏட்டு மார்த்தாண்டத்தில் விபத்தில் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story