கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய பிரபல குற்றவாளி குழித்துறை கோர்ட்டில் இருந்து தப்பி ஓட்டம்..!
குழித்துறை நீதிமன்றத்தில் இருந்து கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய பிரபல குற்றவாளி தப்பி ஓடினார்.
களியக்காவிளை,
கேரளா மாநிலம், பாறசாலை அடுத்த இஞ்சிவிளை, நெடுவிளை பகுதியை சேர்ந்தவர் பாபு ( எ) சாக்கன் பாபு (49). இவர் கேரளா மாநிலத்தில் கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர். இதனால் திருவனந்தபுரம் மத்திய சிறைச்சாலையில் கொலை வழக்கில் தண்டனை கைதியாக உள்ளார்.
மார்த்தாண்டம் காவல் நிலைய வழக்குப்பதிவின் படி இவர் மீது உள்ள வழக்கு குழித்துறை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் குழித்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்த இரண்டு போலீசார் குற்றவாளி பாபு வை பஸ் மூலம் குழித்துறை அழைத்து வந்தனர்.
அப்போது கோர்ட்டுக்குள் கொண்டு செல்ல கையில் மாட்டியிருந்த விலங்கை கழட்டியுள்ளனர். அந்த இடைவெளியில் குற்றவாளி பாபு மின்னல் வேகத்தில் தப்பி ஓடினார். உடனே சுதாகரித்துக் கொண்ட போலீசார் மற்றும் பொதுமக்கள் பாபு -வை துரத்தி சென்றனர். ஆனால் பாபு மின்னல் வேகத்தில் தப்பி சென்றுவிட்டார்.
இதனையடுத்து மார்த்தாண்டம் மற்றும் களியக்காவிளை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் பல்வேறு இடங்களில் தேடினர். பாபுவை கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் கேரளா எல்லையோர பகுதி காவல் நிலையங்கள் மற்றும் திருவனந்தபுரம் கமிஷனர் அலுவலகத்துக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து குற்றவாளியை போலீசார் சல்லடை போட்டு தேடி வருகின்றனர். கொலை குற்றவாளி தப்பி ஓடிய விவகாரம் மார்த்தாண்டம் மற்றும் களியக்காவிளை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story