கோவில்களில் அபிஷேகம், அர்ச்சனை உள்பட 255 கட்டண சேவைகளை இணைய வழியாக வழங்கும் திட்டம்


கோவில்களில் அபிஷேகம், அர்ச்சனை உள்பட 255 கட்டண சேவைகளை இணைய வழியாக வழங்கும் திட்டம்
x
தினத்தந்தி 12 April 2022 2:46 AM IST (Updated: 12 April 2022 2:46 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் உள்ள 550 கோவில்களில் அபிஷேகம், அர்ச்சனை உள்பட 255 கட்டண சேவைகளை இணைய வழியாக வழங்கும் திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

சென்னை,

சென்னை நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் அலுவலகத்தில், கோவில்களில் இணையவழி மூலம் கட்டண சேவைகள் திட்டத்தை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் சொத்துக்களை பாதுகாக்கவும், பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவதற்கும், தேசிய தகவியல் மையத்தின் மூலம் நவீன தொழில் நுட்பத்தில், ஒருங்கிணைந்த திருக்கோவில் மேலாண்மை திட்டம் ஏற்படுத்தப்பட்டு ஒவ்வொரு கோவிலுக்கும் தனித்தனி வலைத்தளம் உருவாக்கப்பட்டு, அதில் கோவிலின் சொத்துக்கள் மற்றும் விலை மதிப்பற்ற விக்கிரகங்களை பதிவேற்றம் செய்து ஆவணப்படுத்தும் பணி மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது.

கட்டணச்சீட்டு மையங்களில்...

தற்போது அனைத்து கோவில் சொத்துக்களின் குத்தகைதாரர்கள் மற்றும் வாடகைதாரர்களுக்கு இணைய வழி மூலமும், வசூல் மையங்களில் கணினி வாயிலாகவும் ரசீதுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

கோவில்களில் வழங்கப்படும் குத்தகை, வாடகை தொகை, நாள்தோறும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தினால், இதுவரை ரூ.160 கோடி வசூலிக்கப்பட்டு உள்ளது.

அதன் தொடர்ச்சியாக, கோவில்களில் உள்ள கட்டண சேவைகள் அனைத்தும், இணைய வழியில் முன்பதிவு செய்து கொள்ளவும், கோவில் கட்டணச்சீட்டு மையங்களில் கணினி வாயிலாகவும் ரசீதுகள் பெறுவதற்கு இந்து சமய அறநிலையத்துறை வலைதளத்தில் (www.tnhrce.tn.gov.in) வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

முதற்கட்டமாக இத்திட்டம், அதிக பக்தர்கள் வருகை தரும் 550 முக்கிய கோவில்களில் அர்ச்சனை கட்டணம், அபிஷேக கட்டணம், வாகன பூஜை கட்டணம், திருமண கட்டணம் உள்ளிட்ட 255 வகையான சேவைகள், இணையவழி மூலம் முன்பதிவாகவும், கோவில் கட்டண சீட்டு மையங்களில் கணினி வாயிலாகவும், ரசீதுகள் வழங்கப்படும்.

இந்த ரசீதுகளில் கியூ.ஆர். கோடு எனப்படும் விரைவு பரிசோதனை குறியீடுகள் இருக்கும். இந்த குறியீடுகளை கருவி மூலம் பரிசோதிக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.

கால விரயம் தவிர்ப்பு

இணையவழியில் கட்டணத்தை செலுத்தியவுடன் ரசீதுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், ரசீதுகள் பக்தர்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். பக்தர்கள் தொகையை செலுத்தியதற்கான சரிபார்ப்பு பட்டனை தேர்வு செய்து, பக்தர்கள் செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை உள்ளீடு செய்தும் ரசீதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இணையவழி மூலம் முன்பதிவு செய்பவர்கள் தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்யப்பட்ட ரசீதை உபயோகம் செய்தால் போதுமானது.

சேவைக்கட்டணம் ரசீது பெறுவது தொடர்பாக குறைபாடுகள் இருந்தால், அதனை 044-28339999 என்ற கமிஷனர் அலுவலக உதவி மைய எண்ணை தொடர்புகொண்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம், இவ்வாறு சேவைகள் அனைத்தும் இணையவழி மூலமாக மேற்கொள்வதால், கோவில் நிர்வாகத்தால் சேவை கட்டணச்சீட்டு ஒளிவு மறைவற்ற வகையிலும் இருப்பதோடு, தொலைதூர பக்தர்கள் தங்களது ஆன்மிக பயணத்திட்டத்தை முன்கூட்டியே செய்து காலவிரயத்தை தவிர்க்க முடியும். மேலும், கூட்ட நெரிசலை தவிர்த்து சிரமமின்றி நிறைவான தரிசனத்தை பெறலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன் இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் ஜெ.குமரகுருபரன், மாவட்ட வருவாய் அதிகாரி (நிலம்) சுகுமார், இணை கமிஷனர்கள் காவேரி, ஜெயராமன், சுதர்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story