100 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு காதல் வலை: ஏமாந்த பெண்கள் பயாஸ்சை விட்டு விடும் படி கெஞ்சல்


100 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு காதல் வலை: ஏமாந்த பெண்கள் பயாஸ்சை விட்டு விடும் படி  கெஞ்சல்
x
தினத்தந்தி 12 April 2022 5:08 AM GMT (Updated: 12 April 2022 5:08 AM GMT)

சமூகவலைதளத்தில் காதல் வலை வீசி லட்சக்கணக்கில் பணம் பறித்த கில்லாடி வாலிபரை விட்டு விடும் படி இளம்பெண்கள் அடம் பிடித்துள்ளனர்.

திருவண்ணாமலை:

சமூக வலைதளங்களில் 100க்கும் மேற்பட்ட பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி ஆபாசமாக பேசியும் பல லட்சக்கணக்கில் பணம் பறித்த பயாசிடம் ஆரணி டவுன் போலீசார் விசாரணை நடத்தினர். 

அப்போது தமிழகம், ஆந்திரா, கர்நாடகா என்று பல்வேறு மாநிலங்களை சேர்ந்த இளம் பெண்களுடன் சமூக வலைதளங்களில் நண்பராக பழகியும், காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பணம் பறித்துள்ளார். குறிப்பாக செல்போன் மற்றும் மெடிக்கல் கடை நடத்தி வருகிறேன். அதற்கு பணம் தேவை வருகிறது எனக் கூறி பணம் பறித்துள்ளார்.

சில பெண்களிடம் ஆபாசமாக பேசும் ஆடியோ பதிவு செய்து கொண்டு மிரட்டி பணம் பறித்துள்ளார். அந்த பணத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்தது தெரியவந்தது.

பயாசிடம் போலீசார் விசாரணை நடத்தி கொண்டிருந்த போது அவரிடம் இரவு நேரங்களில் பேசக்கூடிய இளம்பெண்கள் சிலர் அவருக்கு போன் செய்து கொண்டே இருந்தனர். மேலும் சில பெண்கள் மெசேஜ் அனுப்பினர்.

இளம் பெண்களிடம் போலீசார் பயாசுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. அவர் ஒரு மோசடி நபர். அவரை நம்பி ஏமாற வேண்டாம். இனிமேல் இந்த எண்ணுக்கு போன் செய்யாதீர்கள் என அறிவுரை கூறினர்.

அப்போது சில பெண்கள் பயாஸ் மிகவும் நல்லவர். அவர் எங்களுக்கு வேண்டும் என கூறியுள்ளனர். இளம் பெண் ஒருவர் பயாஸ் எப்படிப்பட்டவராக இருந்தாலும் பரவாயில்லை. அவர் ஜெயிலில் இருந்து வெளியே வந்த பிறகு நான் அவரை திருமணம் செய்து கொள்வேன் எனவும், மேலும் சில பெண்கள் பயாசைவிட்டு விடும்படியும் கெஞ்சியுள்ளனர் .

போலீசார் எவ்வளவோ அறிவுரை கூறியும் அவருக்கு ஆதரவாக பேசி இளம்பெண்கள் அடம் பிடித்துள்ளனர். 

Next Story