பூந்தமல்லி அருகே கோர விபத்து: டிரைவர் இருவர் உட்பட 3 பேர் பலி
பூந்தமல்லி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதிய விபத்தில் டிரைவர்கள் இருவர் உள்பட மூவர் பலியாகினர்.
பூந்தமல்லி:
சென்னை, பூந்தமல்லி அருகே வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் லாரிகள் மோதிக் கொண்ட விபத்தில் டிரைவர்கள் இருவர் உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 48) லாரி டிரைவரான இவர் நேற்று தேனியிலிருந்து டிரைலர் லாரியில் கிரேன் ஏற்றிக் கொண்டு வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு பூந்தமல்லி வழியாக சென்று கொண்டிருந்தார்.
அப்போது இவரது நண்பரான பூந்தமல்லி சென்னீர்குப்பத்தை சேர்ந்த பீட்டர் ராஜ்குமார் (44) மெட்ரோ ரயில் பணியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அவரிடம் தாமோதரன் பூந்தமல்லி வழியாக வருவதாக கூறியுள்ளார்.
இதையடுத்து பீட்டர் ராஜ்குமார் அவரை சந்தித்து பேசுவதற்கு சென்றுள்ளார். வண்டலூர்–மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் வந்து கொண்டிருந்த தாமோதரன் டிரைலர் லாரியை ஓரமாக நிறுத்தி விட்டு லாரியின் முன்புறம் நேற்று இரவு 11 மணியளவில் ராஜ்குமாருடன் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக ஜல்லி ஏற்றிக்கொண்டு பின்புறம் வந்த டிப்பர் லாரி நின்று கொண்டிருந்த டிரைலர் லாரி மீது மோதியது. இந்த விபத்தில் லாரியின் முன்புறம் நின்று பேசிக் கொண்டிருந்த தாமோதரன், பீட்டர் ராஜ்குமார், டிப்பர் லாரியை ஓட்டி வந்த திருநின்றவூர் பாக்கம் பகுதியை சேர்ந்த முருகேசன்(37) ஆகிய மூன்றுபேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் உயிரிழந்த 3 பேரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே விபத்தில் சிக்கியவர்களையும் மற்றும் லாரிகளை கிரேன்கள் மூலம் போலீசார் அகற்றினர்.
Related Tags :
Next Story