கேம் விளையாட செல்போன் தராததால் 6-ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை..!
கோவை அருகே 6-ம்வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை:
கோவை கிணத்துக்கடவு அருகே 6 ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்டான். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கிணத்துக்கடவு அருகே உள்ள கண்ணப்பன் நகரைச் சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி கிட்டனம்மாள். பழனி கூலித்தொழிலாளி. இவர்களுக்கு திருமணமாகி 23 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 3 பெண்களும் ஈஸ்வரன் (13), அர்ஜூனன் (12) ஆகிய 2 மகன்கள் என மொத்தம் 5 பேர் உள்ளனர்.
இதில் ஈஸ்வரன், அர்ஜுனன் இருவரும் கிணத்துக்கடவு அருகே உள்ள சிக்கலாம்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். ஈஸ்வரன் 8-ம் வகுப்பும், அர்ஜூனன் 6-ம் வகுப்பும் படித்து வந்தனர்.
இந்நிலையில் ஈஸ்வரனும், அர்ஜுனனும் அடிக்கடி செல்போனில் ப்ரிபயர் கேம் விளையாடுவது சம்பந்தமாக சண்டை போட்டுள்ளனர்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு செல்போனில் ப்ரிபயர் கேம் விளையாட இருவரும் செல்போனுக்காக சண்டை போட்டனர். இதில் அர்ஜுனன் கீழே கிடந்த பிராந்தி பாட்டிலிலை எடுத்து உடைத்து தனக்குத்தானே வயிற்றில் குத்த முயற்சித்துள்ளான். இவர்களது அம்மா கிட்டனம்மாள் அதை பிடுங்கி சத்தம் போட்டு அனுப்பி வைத்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று பள்ளிக்கு சென்றுவிட்டு மாலையில் ப்ரிபயர் கேம் விளையாட செல்போன் கேட்டு இருவரும் சண்டை போட்டனர். இருவரையும் அக்கா வேப்பிலைக்காரி சமாதனம் செய்துள்ளார்.
அப்போது கோபமடைந்த அர்ஜுனன் வீட்டுக்குச் சென்று ஜன்னலில் தூக்குபோட்டுள்ளார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அருகிலிருந்தவர்கள் உயிருக்கு போராடிய நிலையில் சிறுவனை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அர்ஜுனன் உடலை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமி பாண்டியன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளி மாணவன் சாவுக்கு காரணம் செல்போனில் கேம் விளையாடும் போது ஏற்ப்பட்ட தகறாரா? அல்லது வேறு எதுவும் காரணமா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story