13 ந்தேதி முதல் 16 ந்தேதி வரை புதுவை கடற்கரை பகுதியில் வாகனங்கள் நிறுத்த கட்டுப்பாடு
கடற்கரை திருவிழாவினையொட்டி 13-ந்தேதி முதல் வருகிற 16-ந்தேதி வரை புதுவை கடற்கரை பகுதியில் வாகனங்களை நிறுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரி
கடற்கரை திருவிழாவினையொட்டி 13-ந்தேதி முதல் வருகிற 16-ந்தேதி வரை புதுவை கடற்கரை பகுதியில் வாகனங்களை நிறுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கடற்கரை திருவிழா
புதுவை அரசின் சுற்றுலாத்துறை சார்பில் கடற்கரை திருவிழா 13-ந்தேதி (புதன்கிழமை) தொடங்கி வருகிற 16-ந்தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி புதுவை கடற்கரை, பாண்டி மெரினா, பாரடைஸ் பீச், மணல் குன்று கடற்கரை உள்ளிட்ட இடங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த திருவிழாவில் ஏராளமான சுற்றுலா பயணிகள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடற்கரையிலும் அதிக அளவில் மக்கள் கூடுவார்கள். இதைத்தொடர்ந்து புதுவை கடற்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வாகன நிறுத்தம், நடமாட்டத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு (கிழக்கு) மாறன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தற்காலிக நிறுத்தம்
புதுவையில் 13-ந்தேதி தொடங்கி வருகிற 16-ந்தேதிவரை கடற்கரை திருவிழா கடற்கரை சாலையில் கொண்டாட இருப்பதால் அதில் கலந்துகொள்ள வரும் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்த தற்காலிக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தாங்கள் வரும் வாகனங்களை குறிப்பிட்ட இடங்களில் நிறுத்திவிட்டு நடந்து செல்லும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.
கடற்கரை திருவிழாவில் கலந்துகொள்ள வரும் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை பழைய துறைமுக பகுதியில் மட்டும் நிறுத்த வேண்டும். செயிண்ட் லூயிஸ் வீதி, துய்மா வீதி ஆகியவற்றிலும் புரோமனன்ட் ஓட்டல் எதிரிலும் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
பழைய துறைமுகம்
புஸ்சி வீதியில் பழைய சட்டக்கல்லூரி சந்திப்பு முதல் கடற்கரை சாலை சந்திப்பு வரை எந்த வாகனங்களும் நிறுத்த அனுமதிக்கப்படாது. பிற சாலைகளில் ஒருபுறமாக மட்டுமே வாகனங்ளை நிறுத்த வேண்டும். பொதுமக்கள் அனைவரும் இந்த தற்காலிக ஏற்பாட்டை பின்பற்றி போக்குவரத்து காவல்துறைக்கு ஒத்துழைக்க வேண்டும்.
தற்போது வாகனங்களை நிறுத்த பழைய துறைமுக பகுதியை தேர்வு செய்துள்ளோம். கூட்டம் அதிகமாக இருந்தால் புதிய துறைமுக பகுதியில் வாகனங்களை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுப்போம். அங்கிருந்து சுற்றுலா பயணிகளை அழைத்து வருவது தொடர்பான நடவடிக்கைகளை சுற்றுலாத்துறை எடுக்கும்.
இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு மாறன் கூறினார்.
Related Tags :
Next Story