கிருமாம்பாக்கம் பகுதியில் திடீர் மழை சாலையில் தண்ணீர் தேங்கியதால் மக்கள் அவதி


கிருமாம்பாக்கம் பகுதியில் திடீர் மழை சாலையில் தண்ணீர் தேங்கியதால் மக்கள் அவதி
x
தினத்தந்தி 12 April 2022 7:29 PM IST (Updated: 12 April 2022 7:29 PM IST)
t-max-icont-min-icon

கிருமாம்பாக்கம் பகுதியில் காலை திடீர் மழை பெய்தது. சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் மக்கள் அவதிப்பட்டனர்.

பாகூர்
கிருமாம்பாக்கம் பகுதியில்  காலையில் திடீர் மழை பெய்தது. சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் மக்கள் அவதிப்பட்டனர். 

திடீர் மழை

பாகூர், கிருமாம்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்தது. வெயில் கொடுமையால் பகலிலும், இரவிலும் மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக இரவிலும், அதிகாலையில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் இரவு நேரத்தில் குளிர்ந்த காற்று வீசுவதால் மக்கள் சற்று நிம்மதியாக தூங்குகின்றனர்.
இந்த நிலையில் காலை 6 மணியளவில் கிருமாம்பாக்கம், முள்ளோடை, ரெட்டிச்சாவடி பகுதியில் திடீரென்று லேசான மழை பெய்தது. இந்த மழை காலை 9 மணி வரை கொட்டியது. இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்லும் பொதுமக்கள் அவதிப்பட்டனர். குடை, மழைக்கோட்டு எடுத்து வராததால் மழையில் நனைந்தபடியும், பலர் சாலையோரத்தில் நீண்ட நேரமாக ஒதுங்கியிருந்ததையும் காண முடிந்தது.

சாலைகளில் வெள்ளம்

சுமார் 3 மணி நேரம் பெய்த மழையால் புதுச்சேரி - கடலூர் சாலை மற்றும் கிராமப்புற தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. 
கிருமாம்பாக்கம் இந்திரா நகரில் சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. இதனால் அப்பகுதி மக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். இங்குள்ள கழிவுநீர் வாய்க்காலில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக மழைநீர் தேங்கியதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினர்.

Next Story