அரியலூர் அருகே பயங்கரம்: அண்ணியிடம் தகராறு செய்த வாலிபர் உலக்கையால் அடித்து கொலை
கீழப்பழுவூர் அருகே அண்ணியிடம் தகராறு செய்த வாலிபரை உலக்கையால் அடித்துக்கொன்ற அண்ணனை போலீசார் கைது செய்தனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அருகே உள்ள பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 38). இவருக்கு திருமணமாகி ரதிஅழகி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். முருகானந்தம் திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள அலுமினிய கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது தம்பி ரமேஷ் (32). கட்டிட வேலை செய்து வந்த இவர், தனது அண்ணனுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில் முருகானந்தம் வேலைக்கு சென்றிருந்த நேரத்தில் வீட்டில் இருந்த தனது அண்ணி ரதிஅழகியிடம், தனக்கு சேரவேண்டிய சொத்துக்களை சரிசமமாகப் பிரித்துக் கொடுக்கும்படி ரமேஷ் தகராறு செய்துள்ளார். இதையடுத்து தன்னையும், குழந்தைகளையும் ரமேஷ் அடித்து துன்புறுத்துவதாக முருகானந்தத்திற்கு ரதிஅழகி செல்போனில் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வந்த முருகானந்தத்திற்கும், ரமேசுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த முருகானந்தம் வாசலில் இருந்த உலக்கையால் ரமேசை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காயமடைந்த ரமேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து முருகானந்தத்தின் சகோதரி முத்தமிழ்செல்வி கீழப்பழுவூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் முருகானந்தத்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story