விருதுநகரில் இடி தாக்கி 4 பேர் உயிரிழப்பு...!


விருதுநகரில் இடி தாக்கி 4 பேர் உயிரிழப்பு...!
x
தினத்தந்தி 13 April 2022 7:31 PM IST (Updated: 13 April 2022 7:31 PM IST)
t-max-icont-min-icon

விருதுநகரில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது இடி தாக்கி 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. அந்த வகையில், இன்றும் விருதுநகர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் பலத்த மழை பெய்தது.

இந்த நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கருப்பசாமி நகரில் சதீஷ்குமார் என்பவர் புதிய வீடு கட்டிக்கொண்டிருந்தார். இதில் ரோசல்பட்டியை சேர்ந்த ஜக்கம்மாள், சாந்தி, முருகன், கருப்பசாமி உள்பட ஆறு பேர் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது பலத்த மழையில் பயங்கர சத்தத்துடன் இடி இடித்தது. இதில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த ஒரு பெண், 3 ஆண்கள் என 4 பேர் இடி தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இரண்டு பேர் சிறிய காயங்களுடன் மீட்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து தீயணைப்புத்துறையினருக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயனைப்பு படையினர், உயிரிழந்த 4 பேரின் உடல்களை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கட்டுமானப் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது இடி தாக்கி 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story