கவர்னர் ஆர்.என்.ரவியின் தேநீர் விருந்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி புறக்கணிக்கிறது - திருமாவளவன் அறிவிப்பு


கவர்னர் ஆர்.என்.ரவியின் தேநீர் விருந்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி புறக்கணிக்கிறது - திருமாவளவன் அறிவிப்பு
x
தினத்தந்தி 13 April 2022 8:36 PM IST (Updated: 13 April 2022 8:36 PM IST)
t-max-icont-min-icon

கவர்னர் ஆர்.என்.ரவியின் தமிழ் புத்தாண்டு தேநீர் விருந்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி புறக்கணிக்கிறது என்று விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

சென்னை,

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-

சித்திரை 01- தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடும் மேதகு கவர்னர் அவர்கள் அரசியல் கட்சித் தலைவர்களுக்குத் தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். எனக்கும் அழைப்பு விடுத்துள்ள கவர்னர் அவர்களுக்கு நன்றி. எனினும், அந்நிகழ்வில் நான் பங்கேற்க இயலாது என்பதைத்  தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழர் உணர்வுகளை அவமதிக்கும் வகையில் செயல்பட்டு வரும் கவர்னர் அவர்கள் சித்திரை நாள் தேநீர் விருந்துக்கு அழைப்பது தமிழகத் தலைவர்களைக் கேலி செய்வதாகவுள்ளது. நீட் விலக்கு மசோதாவைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பாமல் காலம் கடத்தும் நிலையில் அவர் அழைப்பை எங்ஙனம் ஏற்க இயலும்?

சனாதனக் கருத்தியலின் பரப்புநராகச் செயல்படும் கவர்னர் அவர்கள், சமூகநீதிக் கருத்தியலைச் சிதைக்கும் வகையில்தான் ஏற்கனவே நீட் விலக்கு மசோதாவைத் திருப்பி அனுப்பினார். அடுத்து நிறைவேற்றப்பட்ட அதே மசோதாவை இன்னும் கிடப்பில் போட்டிருக்கிறார். இந்நிலையில் அவரது அழைப்பை எவ்வாறு ஏற்க இயலும்?

எனவே, கவர்னரின் தமிழர் விரோதப் போக்கிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கவர்னரின் சித்திரை நாளுக்கான தேநீர் விருந்து அழைப்பை விசிக  புறக்கணிக்கிறது. இந்நிலையில்,  நீட் விலக்கு மசோதாவைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு விரைந்து அனுப்பி வைக்குமாறு வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு அதில் திருமாவளவன் கூறியுள்ளார்.

Next Story