அரசு கொள்முதல் நிலைய பூட்டை உடைத்து 125 நெல் மூட்டைகள் திருட்டு...!
நாகை அருகே அரசு கொள்முதல் நிலையத்தின் பூட்டை உடைத்து 125 நெல் மூட்டைகளை மர்மநபர்கள் திருடி சென்று உள்ளனர்.
நாகை,
நாகை மாவட்டம் அகர ஒரத்தூரில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இங்கு குறுவை மற்றும் சம்பா அறுவடை செய்யப்பட்ட நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த 31-ஆம் தேதி கொள்முதல் செய்வது நிறுத்தப்பட்டது.
இதனையடுத்து நெல் கொள்முதல் நிலையத்தில் சுமார் சன்ன ரகம் மற்றும் மோட்டா ரக 6 ஆயிரம் நெல் மூட்டைகள் நுகர்பொருள் வாணிப கழக கிடங்குக்கு அனுப்புவதற்காக வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வேலைபார்க்கும் காவலாளி நேற்று இரவு விடுப்பு எடுத்து சென்று உள்ளார். இதனை அறிந்த மர்ம நபர்கள் 2 லாரியில் நள்ளிரவில் அங்கு வந்தனர். பின்னர், கொள்முதல் நிலையத்தின் பூட்டை உடைத்து அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த 6 ஆயிரம் மூட்டைகளில் 125 மூட்டைகளை திருடி லாரியில் ஏற்றிகொண்டு தப்பி சென்றனர்.
இன்று காலை நெல் கொள்முதல் நிலையத்தின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து கொள்முதல் நிலைய அதிகாரி பாக்யராஜ் என்பவருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து அதிகாரி பாக்யராஜ் வேளாங்கண்ணி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து நெல் மூட்டைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story